ஆமதாபாத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்
போட்டியில் இந்திய அணி 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
டி20
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு
சாம்பியன் இந்தியாவும், கடந்த முறை பைனலில் தோற்ற தென் ஆப்ரிக்காவும்
பலப்பரீட்சை நடத்தின. ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த இந்தப்
போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
பரபரப்பாக
துவங்கிய இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து
வீசியது. தென் ஆப்ரிக்க அணியின் டிகாக் 6 ரன் எடுத்திருந்த போது, 2வது
ஓவரிலேயே பும்ரா பந்தில் போல்டானார். தொடர்ந்து கேப்டன் மார்க்ரம் 4
ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்திய ரிக்கெல்டன் பும்ரா பந்தில் 7 ரன்னில்
அவுட்டானார். ஒரு கட்டத்தில் 20 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தென்
ஆப்ரிக்கா தடுமாறியது.
அதன்பிறகு, களம் கண்ட மில்லர் மற்றும்
பிரேவிஸ் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர். தொடர்ந்து இருவரும்
சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். இதனால், 11.1 ஓவரில் தென் ஆப்ரிக்கா 100
ரன்னை எட்டியது. 29 பந்தில் 45 ரன் விளாசிய பிரேவிஸ் துபே பந்தில் கேட்ச்
கொடுத்து அவுட்டானார். இருவரும் சேர்த்து 97 ரன் குவித்தனர். மறுபக்கம்
அதிரடியாக ஆடி வந்த மில்லர் 26 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 35 பந்தில்
63 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த யான்சென் 2
ரன்னிலும், போஸ் 5 ரன்னிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
கடைசியில் ருத்ரதாண்டவம் ஆடிய ஸ்டப்ஸ் 24 பந்தில் 44 ரன் குவித்து கடைசி
வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில்
7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3
விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம்
துபே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
188 ரன் இலக்குடன்
களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 51 ரன்னுக்கே 5
விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இஷான் கிஷான் (0), திலக் வர்மா (1),
அபிஷேக் ஷர்மா (15), வாஷிங்டன் சுந்தர் (11), சூர்யகுமார் யாதவ் (18)
ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக்
பாண்டியா (18) கேசவ் மஹாராஜா 15வது ஓவரில் அவுட் ஆனார். அதே ஓவரில் ரிங்கு
சிங் (0), அர்ஷ்தீப் சிங் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். நீண்ட நேரம்
தாக்குபிடித்த ஷிவம் துபே 42 ரன்னில் அவுட்டானார். பும்ரா வந்த வேகத்தில்
பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி 18.4 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல்
அவுட்டானது. இதன்மூலம், 76 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி
பெற்றது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இது இந்திய அணி சந்திக்கும் முதல்
தோல்வியாகும்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் யான்சென் 4 விக்கெட்டும்,
கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டும், போஸ் 2 விக்கெட்டும், மார்க்ரம் ஒரு
விக்கெட்டையும் எடுத்தனர்.
