ஆம்புலன்ஸில் பூக்களை எடுத்துச் சென்ற தொண்டர்கள்; விஜய் கூட்டத்தில் சர்ச்சை!

தமிழ்நாட்டில் வருகின்ற 23ஏம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று (10-04-26) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணியளவில் சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் காரைக்குடி சென்ற விஜய்க்கு, ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து விஜய் பிரச்சார வாகனத்தில் நின்று கொண்டு தொண்டர்களை பார்த்துக்கொண்டே சென்றார். அங்கு ஏராளமான தொண்டர்கள் கூடியதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அனுமதிக்கப்பட்ட நேரம் என்பது 12:30 முதல் 2:30 என்ற நிலையில் விஜய் நடத்திய இந்த ரோட் ஷோ காரணமாக பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்த இடத்திற்கு செல்ல நேர தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விஜய் பேசுவதற்காக திட்டமிட்டிருந்த பகுதிக்கு வந்தும் கொடுக்கப்பட்ட நேரம் கடந்ததால் விஜய் பேசாமலே அங்கிருந்து  திருச்சிக்கு புறப்பட்டார். இது தவெக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், விஜய் மீது வீசுவதற்காக தனியார் ஆம்புலன்ஸில் தவெக தொண்டர்கள் பூக்களை எடுத்துச் சென்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காரைக்குடி சென்ற விஜய்யை வரவேற்கு ஏராளமான தொண்டர்கள் அவர் மீது பூக்களை வாரி வீசினர். பதிலுக்கு விஜய்யும், தனது தொண்டர்கள் மீது பூக்களை வீசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில், சில தவெக தொண்டர்கள் விஜய் மீது பூக்களை வீச ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Source link