செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. ஆர்.ரவிந்திரன் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இவரின் இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தது. சோழர்களை மையப்படுத்தி ஃபேண்டஸி அட்வென்சர் ஜானரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனமே பெற்றது. மேலும் சோழர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகவும் இரண்டாம் பாதியில் வசனங்கள் சரியாக புரியவில்லை என்றும் வன்முறை அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் காலம் மாற மாற அப்படம் ரசிகர்கள் விமர்சனத்தை அப்படம் மாற்றியது. அப்போது வெளியான விமர்சனங்களுக்கு நேர் எதிராக மாறி இப்படத்தை திரையரங்கில் தவற விட்டுவிட்டோம் என ரசிகர்கள் ஃபீல் பண்ணும் அளவுக்கு விமர்சனங்கள் அமைந்தது. பின்பு 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு என இரண்டு முறை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போது கூட ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்தனர். இந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக 2021ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது. அதிலும் தனுஷ் நடிப்பதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஆனால் அதன் பிறகு இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் ஆரம்பிக்கும் சூழல் இப்போதைக்கு இல்லை. சமீபத்தில் இது குறித்து பேசிய செல்வராகவன், “என் கையில் மட்டுமில்லை, அனைவருமே ஒன்று சேர வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து ஒரு கல்லூரி நிகழ்வில் ஆண்ட்ரியா பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நிறைய மெமரிஸ் இருந்தது. ஏனென்றால் கிட்டத்தட்ட 200 நாட்கள் ஷூட்டிங் நடத்தினோம். அதில் நிறைய கஷ்டப்பட்டோம். அந்த படத்துக்கு பிறகு எந்த படம் நடித்தாலும் ஈஸியாக இருந்தது. செல்வராகவனுடன் வேலை செய்வது கஷ்டம். அதனால் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன்” என்றார்.
