பணி ஓய்வுக்குப் பின், எனக்கு மிகவும் பிடித்த மற்றும் தேவை அதிகமுள்ள ‘ஆட்டோமேட்டிக் அயர்னிங் அண்டு போல்டிங்’ கருவிகள் வாங்கி, ஆடைகள் தேய்த்து தரலாம் என நினைக்கிறேன். இயந்திரங்கள் எங்கே கிடைக்கும்? யாரை அணுகுவது? ஆலோசனை தேவை .
– ராஜா,
பாளையம்பட்டி, விருதுநகர்
ஓய்வு பெற்ற பின், சுயதொழில் துவங்க நினைக்கும் உங்கள் எண்ணத்துக்கும் துணிச்சலுக்கும் பாராட்டுகள். கோவை, சென்னை, திருப்பூர் போன்ற முக்கியமான நகரங்களில் இத்தகைய இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உள்ளனர். நீங்கள் வலைதளம் வாயிலாகவும் இவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
இயந்திரத்தை வாங்குவதற்கு முன், அந்த நிறுவனத்திடம் செயல்முறை விளக்கம் கேட்டுப் பெறுங்கள். அதை இயக்குவது, பராமரிப்பது எப்படி என்று கற்றுக்கொள்வது அவசியம். மேலும், இதற்கு மும்முனை மின்சாரம் தேவைப்படலாம். உங்கள் இடத்தில் அதற்கான வசதி உள்ளதா என்பதை மின் வாரியத்தில் கேட்டு உறுதி செய்யுங்கள். மேலும் இயந்திரம் பழுதானால் சரிசெய்ய, விற்பனையாளர் உங்கள் பகுதிக்கு சர்வீஸ் ஆட்களை அனுப்புவாரா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அந்த இயந்திரத்தின் அளவுக்கு ஏற்பப் போதிய இடவசதி உள்ள கடையைத் தேர்வு செய்யுங்கள்.
இதையெல்லாம் செய்வதற்கு முன்பு, உங்கள் ஊரான பாளையம்பட்டி மற்றும் அருப்புக்கோட்டைப் பகுதிகளில், இத்தகைய சேவைக்கு எவ்வளவு தேவை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சிறிய ஆய்வு செய்யுங்கள். மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு இறங்குவது நல்லது.
நம்முடைய ஆன்லைன் பேமென்ட்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகிய அனைத்தையும் வருமான வரித் துறை கண்காணிக்கும் என்று சொல்லப்படுகிறதே. இது தனிநபர் உரிமையைப் பாதிக்காதா?
– என். சர்மிளா, கோவை.
பல்வேறு சமூக ஊடகங்களில் இத்தகைய தவறான தகவல் பரப்பப்படுகிறது, ஆனால், அது உண்மை இல்லை. சட்டத்தை மதிக்கும் நேர்மையான குடிமக்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் டீக்கடையில் ‘கூகுள் பே’ செய்வது, மளிகைக்கடையில் கார்டு தேய்ப்பது போன்ற அன்றாடச் செலவுகளை வருமான வரித்துறை கண்காணிப்பதில்லை; அதற்கு அவர்களுக்கு அவசியமும் இல்லை. மேலும், எல்லோருடைய இ – மெயில்கள், சமூக ஊடக கணக்குகள், டிரேடிங் செயலிகள் உள்ளிட்டவற்றின் விபரங்களை வருமான வரித் துறைப் பெற்று உள்ளே நுழைய முடியாது.
உயர் மதிப்பு பரிவர்த்தனைகள் அனைத்தும் எப்படியிருந்தாலும், வருமான வரித்துறையினருக்குத் தெரியும். அது உங்களுடைய ஆண்டு வருமான வரி பட்டியலில் இடம்பெற்றிருக்கும். வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடும் பெரும் மோசடிக்காரர்கள் விஷயத்தில் தான் இத்தகைய கண்காணிப்பு அவசியம். அங்கே மட்டும், வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
என் கிரெடிட் ஸ்கோரில் ‘எஸ்.எம்.ஏ., – 0’ என்று காட்டப்பட்டுள்ளது. இது என்னது, நான் என்ன செய்ய வேண்டும்?
– சாமுவேல் தங்கம், கரூர்
எஸ்.எம்.ஏ., என்பதற்கு ‘ஸ்பெஷல் மென்ஷன் அக்கவுண்ட்’ என்று அர்த்தம். அதாவது ஒரு வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என்று கருதுவோம். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் மாதாந்திர தவணைத் தொகை செலுத்த வேண்டும். அந்தத் தவணையை 90 நாட்கள் வரை கட்டவில்லை என்றால், அது வாராக்கடன் கணக்கு என்று வகைப்படுத்தப்படும்.
ஆனால், அதற்கு முன்னதாகவே அந்தக் கடனை வாங்கியவர் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை மதிப்பிடுவதற்கு இந்த எஸ்.எம்.ஏ., வகைப்படுத்தல் உதவுகிறது. அதாவது, கட்ட வேண்டிய தவணை தேதியில் இருந்து 30 நாட்கள் வரை கட்டாமல் இருந்தால் ‘எஸ்.எம்.ஏ.,- – 0’ என்று வகை செய்யப்படும். 31 முதல் 60 நாட்கள் வரை தாமதமானால், ‘எஸ்.எம்.ஏ., – -1’ 61 முதல் 90 நாட்கள் வரை தாமதமானால், ‘எஸ்.எம்.ஏ., - -2’ என்று கடன் கொடுத்த வங்கி குறிப்பிட்டு, கிரெடிட் ஏஜென்சிகளுக்குத் தெரிவிக்கும். இந்தக் கடன் வாராக் கடன் ஆகிவிடலாம் என்பதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞையே இந்த எஸ்.எம்.ஏ., மதிப்பீடுகள்.
உங்கள் விஷயத்தில் நீங்கள் 30 நாட்களாக ஒரு குறிப்பிட்ட இ.எம்.ஐ.,யைச் செலுத்தவில்லை என்று தெரிகிறது. உடனடியாக, அந்தத் தவணையைச் செலுத்தி, கடன் கணக்கை நேர் செய்துகொள்ளுங்கள். இல்லையெனில், அடுத்தடுத்த கடன்கள் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும்.
மியூச்சுவல் பண்டு முதலீட்டில், வழக்கமான திட்டத்துக்கும் நேரடி திட்டத்துக்கும் என்ன வித்தியாசம்? எதைத் தேர்வு செய்வது?
– டி. சஞ்சீவி, மடிப்பாக்கம்.
வழக்கமான திட்டத்தில், மியூச்சுவல் பண்டு முகவருக்குக் கொடுக்கப்படும் கமிஷன் சேர்ந்திருக்கும். நேரடி மியூச்சுவல் பண்டில், இந்தச் செலவு இருக்காது. இது தான் வித்தியாசம். மற்றபடி, அந்த பண்டுத் திட்டம் ஒரே விதமான பங்குகளில் தான் முதலீடு செய்யும். மியூச்சுவல் பண்டு திட்டத்தின் கடந்த கால வரலாற்றை அலசி, ஆராய்ந்து தேர்வு செய்யும் திறனும் நேரமும் உங்களுக்கே இருக்குமானால், நீங்கள் நேரடி திட்டத்துக்குப் போகலாம். உங்களால் அதைச் செய்ய முடியாது, முகவருடைய ஆலோசனை தேவைப்படும் என்றால், வழக்கமான திட்டத்துக்குப் போவது நல்லது.
சமீபத்திய ஆய்வு ஒரு முக்கியமான அம்சத்தைக் குறிப்பிடுகிறது. ஒரு குறிப்பிட்ட பங்குச் சந்தை சார்ந்த பண்டு திட்டத்தில், வழக்கமான திட்டம் மற்றும் நேரடி திட்டத்தில் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக எஸ்.ஐ.பி., போட்டு வந்தால், வழக்கமான திட்டத்தில் பணம் போட்டவர்கள், நேரடி திட்டத்தில் பணம் போட்டவர்களை விட 25 சதவீத அளவுக்குக் குறைவாகவே லாபம் பார்த்துள்ளனர்.
பல்வேறு செலவினங்கள் இத்தகைய நஷ்டத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திவிட்டது தெரிகிறது. நீங்களே, மியூச்சுவல் பண்டு திட்டங்களை பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்துகொண்டால், உங்கள் உழைப்புக்கு இந்த 25 சதவீதம் கூடுதல் லாபமாக கிடைக்கும்.
