என் பெற்றோருக்கு நானும் என் இரண்டு மூத்த சகோதரிகளும் இருக்கிறோம். நான் துணை ராணுவத்தில் பணிபுரிகிறேன். என்னால் பெற்றோரை சில தகுந்த காரணங்களால் கவனிக்க இயலாவிட்டால், என் சகோதரிகள் கவனித்துக் கொள்ள சட்டத்தில் வழி உண்டா?
– புருஷோத்தமன், மேலப்பனங்காடி, மதுரை
நீங்கள் துணை ராணுவத்தில் பணியாற்றுவதால், பெற்றோரை நேரில் கவனித்து கொள்ள முடியாத யதார்த்தம் புரிகிறது. ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம்’, பிள்ளைகளில் ஆண், பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை. அதாவது, மகன்களை போலவே மகள்களும், அவர்களுக்கு திருமணம் ஆகியிருந்தாலும், பெற்றோரை கவனித்துக் கொள்ள கடமை உள்ளவர்கள்.
ஆனால், ஒரு விஷயம். உங்களால் நேரில் கவனிக்க முடியவில்லை என்பதற்காக, உங்கள் சட்டப்பூர்வ பொறுப்பை முழுமையாக சகோதரிகளிடம் மாற்றிவிட முடியாது. நீங்கள் வெளியூரில் இருந்தாலும், பெற்றோரின் அன்றாட செலவுகள் மற்றும் மருத்துவத்துக்காக உங்கள் வருமானத்திலிருந்து ஒரு தொகையை தொடர்ந்து தர வேண்டும்.
பெற்றோரின் பராமரிப்புக்கு சகோதரிகளும் உதவ வேண்டும் என்று சட்டம் சொல்வது உண்மைதான். ஆனால், ஒருவேளை அவர்கள் அதை மறுத்தால், சட்டப்படி பெற்றோர்தான் தங்கள் மகள்கள் மீது உரிமை கோர முடியுமே தவிர, நீங்கள் உங்கள் சகோதரிகளை சட்டத்தின் வாயிலாக கட்டாயப்படுத்த முடியாது.
நான் 2001ம் ஆண்டு விஜயா வங்கியின் சில பங்குகளை வாங்கினேன். பாங்க் ஆப் பரோடாவுடன் அவ்வங்கி இணைந்து விட்டது. நான் அந்த பங்குகளை 2024ம் ஆண்டு மின்னஞ்சல் வாயிலாக மாற்ற முயன்றபோது என்னால் இயலவில்லை. பிறகு தபால் வாயிலாக அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை. எனவே, என் பங்குகளை மாற்ற வழி கூறுங்கள்.
– கணேசன், திருப்பூர்
விஜயா வங்கி 2019ம் ஆண்டிலேயே பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டுவிட்டது. பழைய விஜயா வங்கி பங்குகளுக்கு பதிலாக, பாங்க் ஆப் பரோடா பங்குகள் (1000 பங்குகளுக்கு 402 என்ற விகிதத்தில்) உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் 2001ல் வாங்கிவிட்டு, பல ஆண்டுகளாக கவனிக்காமல் விட்டிருக்கிறீர்கள்.
செபி விதிமுறைகளின்படி, தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் ஈவுத்தொகை வாங்கப்படாமல் இருந்தால், அந்த பங்குகள் தானாகவே அரசின் ‘முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு’ (ஐ.இ.பி.எப்.) மாற்றப்பட்டு விடும். உங்களின் மின்னஞ்சல் அல்லது தபாலுக்கு பதில் வராததற்கு காரணம் இதுவாகவே இருக்கும்.
வங்கிக்கு கடிதம் அனுப்புவதை நிறுத்திவிட்டு, பாங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ பதிவாளரான ‘கேபின் டெக்னாலஜீஸ்’ஐ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பழைய விஜயா வங்கி பங்கு சான்றிதழ் நகல், பான் கார்டு மற்றும் ஆதார் ஆகியவற்றை இணைத்து, ‘என் பங்குகளின் தற்போதைய நிலை என்ன? ஐ.இ.பி.எப்.க்கு மாற்றப்பட்டு விட்டதா?’ என்று குறிப்பிட்டு ‘என்டைடில்மென்ட் லெட்டர்’ கேட்க வேண்டும்.
பங்குகள் ஐ.இ.பி.எப்.க்கு மாற்றப்பட்டது உறுதியானால், அதை சாதாரண தபால் வாயிலாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ மீட்க முடியாது. ‘ஐ.இ.பி.எப்.-5’ என்ற படிவத்தை மத்திய அரசின் இணையதளத்தில் ஆன்லைனில் தாக்கல் செய்து, பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும், இனி காகித பங்குகளை விற்று பணமாக்க முடியாது. எனவே, முதலில் உங்கள் பெயரில் ஒரு டீமேட் கணக்கை துவக்குங்கள். இது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆடிட்டர் உதவியை நாடுங்கள்.
நீண்டகால தேவைக்கு எந்த கடன் எடுப்பது நல்லது? மியூச்சுவல் பண்டு கடனா? தங்க நகை கடனா?
எஸ். சிவகுமார், மின்னஞ்சல்
மியூச்சுவல் பண்டுகளின் மீதான கடனாக இருந்தாலும் சரி, தங்க நகை கடனாக இருந்தாலும் சரி, இரண்டுமே, குறுகிய கால, அவசர தேவைக்கான கடன்கள்தான். நீண்டகால தேவைக்கு இவை இரண்டுமே பொருத்தமானவை அல்ல. மேலும் இரண்டுக்குமே வட்டி அதிகம்.
உங்களிடம் வீடு இருந்தால், அதை அடமானம் வைத்து கடன் வாங்கலாம். அது நீண்டகாலத்துக்கு உதவும், வட்டியும் குறைவு.
நீங்கள் குறிப்பிட்ட இரண்டில் ஒன்றுதான் வேண்டும் என்றால், மியூச்சுவல் பண்டுகள் மீது கடன் வாங்குவது புத்திசாலித்தனமானது. ஏனெனில், நீங்கள் கடனுக்கு கட்டும் தோராயமான 9 – 11 சதவீத வட்டியை விட, அடமானம் வைக்கப்பட்ட மியூச்சுவல் பண்டு முதலீடு நீண்டகாலத்தில் அதிக வருமானத்தை, அதாவது கிட்டத்தட்ட 12 – 15 சதவீத வருவாய் தர வாய்ப்புள்ளது.
என் பொதுத்துறை வங்கி கணக்கிலிருந்து எனது வேறொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப அங்கு காசோலை கொடுத்தேன். அதில் தொகை எழுதும் இடத்தில் ஒரு எண் சரியாக எழுதாததால் அதன் மேல் திரும்பவும் எழுதி விட்டேன். இதற்காக பொதுத்துறை வங்கி என் காசோலையை நிராகரித்து, அபராதமாக 590 ரூபாய் என் கணக்கிலிருந்து எடுத்துக்கொண்டது. இது சரியா?
அமுதா கிருபாநிதி, சென்னை.
காசோலையில் திருத்தம் இருக்கக்கூடாது என்பது அடிப்படை விதி. தற்போதைய ரிசர்வ் வங்கியின் ‘சி.டி.எஸ்.-2010’ விதிகளின்படி, காசோலையில் பெயர் அல்லது தொகை எழுதும் இடத்தில் சிறு பிழை ஏற்பட்டாலும், அதனை அடித்து எழுதி அருகில் கையெழுத்து போடும் பழைய நடைமுறை செல்லாது. பிழை ஏற்பட்டால், அந்த காசோலையை ரத்து செய்துவிட்டு புதிய காசோலை தான் எழுதி கொடுக்க வேண்டும்.
இத்தகைய முறையில் காசோலை நிராகரிக்கப்பட்டால், அதற்கு என்ன அபராதம் என்பதை வங்கிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன. அதன்படி தான் அந்த வங்கி, உங்களது கணக்கில் இருந்து அபராதம் வசூலித்துள்ளது.
நீங்கள் திருத்தப்பட்ட காசோலையை கொடுத்து வங்கியின் நேரத்தையும், முயற்சியையும் வீணடித்துள்ளீர்கள். ஒருவேளை வேறு யாரோ ஒருவர் அந்த திருத்தத்தை செய்து வங்கியில் சமர்ப்பித்து, அந்த காசோலை அனுமதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் வங்கியை சும்மா விடுவீர்களா? எப்படி காசோலையை அனுமதித்தீர்கள் என்று வழக்கு போட மாட்டீர்களா? காசோலை நடைமுறையில் இருந்தாலும், இப்போது பணம் அனுப்ப எல்லாமே ‘நெப்டு’ ‘ஆர்.டி.ஜி.எஸ்.,’தானே?
தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய் பெறும் பெண்கள், அந்த தொகையை மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., துவங்கலாமா? அரசு வழங்கும் உதவி தொகையை சேர்த்து முதலீடு செய்வது சட்டப்படி அல்லது திட்ட விதிமுறைகளுக்கு எதிரானதா?
பி. பாஸ்கரன், நாமக்கல்
நிச்சயம் இல்லை. அரசு, அந்த பணத்தை பெண்களுக்கு கொடுத்த பிறகு, அது அவர்களது பணம். அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எந்த விதிமுறைகளும் அவர்களை தடுக்க முடியாது. நீங்கள் சொல்வது போல், அந்த பணத்தை முறையாக எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்து வருவார்களேயானால், அந்த பணத்துக்கு அதைவிட சிறந்த பயன்பாடு வேறு எதுவும் இருக்க முடியாது.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ—மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல்வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph: 98410 53881
