ஆலய அர்ச்சகராக பணிபுரியும் நான், நிரந்தர மாத வருமானம் இன்றி, வாழ்நாள் சேமிப்பாக ரூபாய் 10 லட்சம் சேர்த்து வைத்துள்ளேன். அதை எனக்கும் எனக்கு பின் என் மனைவிக்கும் மாதாந்திர வருமானமாக கிடைக்க எதில் முதலீடு செய்யலாம் என தங்களின் மேலான கருத்தை தெரியப்படுத்தவும்.
சேகர் , கோவை
அதிக வட்டிக்கு ஆசைப்பட வேண்டாம். உங்கள் வயதுக்கு மனநிம்மதி அவசியம். அதனால், அஞ்சலகத்தில் உள்ள இரண்டு திட்டங்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கக்கூடும். ஒன்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம். இதற்கு தான் அதிகபட்சமாக 8.20 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதில் ஐந்து ஆண்டுகள் ‘லாக்கின்’ காலம் உண்டு.
காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வரவு வைக்கப்படும். 10 லட்சம் ரூபாய்க்கு தற்போதைய வட்டி விகிதத்தில் கணக்கு போட்டால், ஓராண்டுக்கு 82 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒவ்வோர் காலாண்டும், 20,500 ரூபாய் கிடைக்கும். அஞ்சலகத்திலேயே மாதாந்திர வட்டி பெறும் திட்டம் உள்ளது. 7.40 சதவீத வட்டி. ஒருவர் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் வரை போட முடியும். உங்கள் மனைவியோடு சேர்ந்து ஜாயின்ட் கணக்கு துவங்கினால் 15 லட்சம் வரை போட முடியும். 9 லட்சத்துக்கு மாதாந்திர வட்டி, 5,550 ரூபாய் கிடைக்கும்.
எனது பெயரில் இருந்த ஒரு அசையா சொத்தை 2025 – -26ம் நிதி ஆண்டில் விற்பனை செய்து, அதில் கிடைத்த பணத்தை எனது வங்கி சேமிப்பு கணக்கில் வைத்துள்ளேன். இந்த தொகையை பயன்படுத்தி எனது மனைவி பெயரில் உள்ள சேதம் அடைந்து உள்ள வீட்டை செப்பனிடலாமா?
பி. நாகராஜன், சென்னை
வருமான வரி சட்டத்தின் படி, பழைய வீட்டை விற்று வரும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி விலக்கு பெற வேண்டுமென்றால், ஒன்று புதிய வீடு ‘வாங்க’ வேண்டும், அல்லது புதிய வீடு ‘கட்ட’ வேண்டும். இதில் ‘செப்பனிடுதல்’ என்பதற்கு இடமில்லை. மேலும் அந்த வீடு உங்கள் மனைவி பெயரில் இருக்கிறது. பொதுவாக வரி விலக்கு பெறுவதற்கு புதிய சொத்து அல்லது கட்டுமானம், வரி செலுத்தும் உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.
இப்படி வேண்டுமானால் செய்யலாமா என்று பாருங்கள். உங்கள் மனைவியின் வீட்டை ரிப்பேர் மட்டும் செய்யாமல், மேலே ஒரு தளம் எழுப்ப முயலுங்கள். அங்கே புதிய வீடு ‘கட்டும்’ விதி பொருந்தும். இது சம்பந்தமாக, எதற்கும் ஒருமுறை ஒரு ஆடிட்டரை கேட்டுக்கொள்ளுங்கள்.
அப்படி செய்ய முடியவில்லை, வீட்டை ரிப்பேர் செய்வதுதான் முக்கியம் என்று தோன்றினால், பேசாமல் 12.50 சதவீதம் நீண்டகால மூலதன ஆதாய வரியை செலுத்தி விடுவது புத்திசாலித்தனம். மிச்ச பணத்தில், வீட்டை செப்பனிட்டு கொள்ளலாம்.
மத்திய அரசு செப்டம்பர் 2025ல் பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு செய்தது. வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களில் விலை திருத்தம் செய்து இதன் பலன் நுகர்வோரை அடைய வேண்டும் என்று எச்சரித்தது. ஆனால், சில நிறுவனங்கள், பொருட்களின் விலையை குறைக்காமல் சிறிது எண்ணிக்கை அல்லது அளவை கூட்டி தருகின்றன. இது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதானா?
ப. ராஜேந்திரன், பூந்தமல்லி
ஆம், இது அனுமதிக்கப்பட்டதுதான். சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான். வணிகத்தில் ‘மேஜிக் ப்ரைஸ் பாயின்ட்ஸ்’ என்று ஒரு விஷயம் உண்டு. அதாவது 5 ரூபாய், 10 ரூபாய் விலையில் விற்கப்படும் பிஸ்கட், சோப்பு போன்ற பொருட்களை எடுத்து கொள்வோம். ஜி.எஸ்.டி., குறைந்ததால், 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டின் விலையை 4 ரூபாய் 60 பைசா என்று மாற்றினால், கடைகளில் சில்லறை தட்டுப்பாடு ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கும் அது சிரமம்.
இதை தவிர்க்க, நிறுவனங்கள் இரண்டு வழிகளை பின்பற்றுகின்றன. ஒன்று விலை குறைப்பு. அதிக விலை கொண்ட டி.வி., பிரிஜ் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்படுகிறது. இரண்டாவது, அளவு அதிகரிப்பு. 5 ரூபாய், 10 ரூபாய் போன்ற சிறிய பொருட்களுக்கு, விலையை குறைக்காமல், அந்த வரிச்சலுகைக்கு இணையான கூடுதல் எடையை தருகின்றன.
ஜி.எஸ்.டி சட்டத்தின் பிரிவு 171ன் படி, வரிச்சலுகையின் பலன் நுகர்வோரை சென்றடைய வேண்டும் என்பதுதான் விதி. அது விலை குறைப்பாகவோ அல்லது கூடுதல் அளவாகவோ இருக்கலாம். எனவே, விலையை குறைக்காமல், எடையை அதிகரித்து கொடுப்பது சட்டப்படி செல்லும்.
ஒரு சிறு நிதி வங்கியில் உள்ள என் கணக்கை மூடிவிடும்படி, கிளைக்கே நேரடியாக சென்று எழுதி கொடுத்தேன். ஓரிரண்டு நாட்களில் மூடிவிடுவோம் என்றார்கள். ஒரு வாரம் ஆகியும் பதில் இல்லை. வங்கி அதிகாரிகளைக் கூப்பிட்டால் ஏதோ ‘சர்வர் பிரச்னை’ என்று சொல்லி மழுப்புகிறார்கள். நான் புகார் அளிக்கலாமா?
எஸ். சிவகுமார், மின்னஞ்சல்
சர்வர் பிரச்னை என்பதெல்லாம் சால்ஜாப்பு. இன்றைக்கு புதிய கணக்குகளை துவங்குவது சிரமமாக இருக்கிறது. அதனால், பழைய கணக்குகளை மூடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். நீங்கள் அந்த வங்கியின் நோடல் அலுவலருக்கு மின்னஞ்சல் அனுப்பி, விபரம் தெரிவியுங்கள். உரிய பதில் வரவில்லை என்றால், அடுத்தடுத்த மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். மேலே இருந்து விசாரிப்பார்கள். அப்போது, அந்த வங்கிக் கிளை தானாகவே உங்கள் கணக்கை மூடி கொடுத்துவிடும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பை விட காற்று மாசுபாடு இந்தியாவின் ஜி. டி. பி.,யை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணத்தை அரசால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது கட்டுப்படுத்த முடியவில்லையா? மின்சார வாகனங்கள்தான் தீர்வா?
க. நாக நந்தினி, திருவில்லிபுத்தூர், விருதுநகர்.
காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி. நாம் வளரும் நாடு. தொழில்துறையும் வேண்டும், சுற்றுச்சூழலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். நமது அரசுகள் இரண்டுக்கும் சம அளவில் முன்னுரிமை கொடுக்கின்றன.
மின்சார வாகனங்கள் முழுத்தீர்வு அல்ல. அவற்றுக்கு தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நமது நாட்டில் 70 சதவீதம் நிலக்கரியை தான் நம்பியிருக்கிறோம். சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு விரைவில் மாற வேண்டும். தனிநபர் வாகனங்களை விடுத்து, மெட்ரோ, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு திரும்புவது தான் நீண்ட கால அளவில் சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வாகும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, ‘இ—மெயில்’ மற்றும் ‘வாட்ஸாப்’ வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
*************@***il.com“>pa*************@***il.com ph: 98410 53881
