ஆயுள் காப்பீடு என்பது வரி சேமிப்பிற்காக அல்ல

வரி செலுத்தும் காலம் வந்து விட்டதல்லவா, ஒரு பழைய நினைவு. பல வருடங்களுக்கு முன் நடந்தது. புதிதாக வேலைக்கு சேர்ந்த நான் ஆறு மாதம் கையில் சம்பளம் வருவது கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன். என் குடும்பத்துக்கு வேண்டிய ஒரு நடுத்தர வயது நபர் அலுவலகத்தில் என்னை தேடி வந்தார். என்னவாக இருக்கும் என்று நான் யோசிப்பதற்கு முன், ‘வரி கட்ட வேண்டி இருக்குமே, அதை குறைப்பதற்கு வழி தெரியுமா’ என்றார். இதற்கு மேல் என்ன வேண்டும், இரண்டு காதுகளையும் திறந்து கொண்டு கேட்டேன்.

ஒரு ஆயுள் காப்பீடு பாலிசி தருகிறேன் இதை எடுத்துக் கொண்டால் வரியே செலுத்த தேவையில்லை என்று ஒரு கணக்கு கூறினார். அதில் எனக்கு காதில் விழுந்தது, ‘வரி செலுத்த வேண்டாம்’ என்ற வார்த்தைகள் தான்.

பணத்தை செலுத்தி விட்டு ரசீதுடன் வீட்டுக்கு வந்த நான், பெற்றோரிடம் எனது நிதி ஆளுமையை பெருமிதத்துடன் கூறினேன்.

மெதுவாக, வருத்தத்துடன் அவர்கள், “ஆயுள் காப்பீடு என்பது ஒரு நோக்கத்துடன் எடுக்க வேண்டியது. வரி சேமிப்புக்காக அதை நாடுவது என்பது ஒரு குறுகலான பார்வை.

“ஆயுள் பாலிசி தான் எடுக்க வேண்டும் என்றால் இதைவிடவும் மிக பொருத்தமான பாலிசிகள் இருக்கின்றனவே, ஒரு வார்த்தை எங்களை கேட்டிருக்கலாமே,” என்று எனது பெருமித பலுானை வெடிக்கச் செய்தனர். உங்களில் பலரும் இதை கேட்டு, ‘நாமும் இதே மாதிரி செய்திருக்கோமே’ என்று நினைக்கலாம்.

இந்த தவறான முடிவின் அடிப்படை என்னவென்றால், முக்கிய குறிக்கோள் என்னவென்று ஆராயாமல், ஒரு காரணத்துக்காக வேறொரு பாதையை நோக்கி செல்வது தான்.

வரி சேமிக்க வேண்டும் என்றால் ஆயுள் காப்பீடு மட்டுமே வழியில்லை. அதற்கு உங்கள் பணியிடத்தில் செலுத்தக்கூடிய இ.பி.எப்., முதற்கொண்டு மற்ற சில வழிகள் உள்ளன.

சொந்த தொழில் செய்பவர்கள் அல்லது ப்ரோபஷனல் துறையை சார்ந்தவர்கள் பி.பி.எப்., கணக்கில் முதலீடு செய்யும் பணம் வரிச்சலுகை பெறும்.

காப்பீடு வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆயுள் காப்பீடு வாங்கி வரிச்சலுகையும் கிடைத்தால் நல்லது என்று எடுத்து கொண்டு போவது தான் சரியான முறை.

அப்போதுதான் நமது கவனம் ஆயுள் காப்பீட்டில் இருக்கும். எது நமக்கு உகந்த பாலிசி என்று துல்லியமாக கணக்கிட முடியும்.

ஒவ்வொரு நிதியாண்டு முடியும் தருணத்தில், நீங்கள் செய்த வரி சேமிப்புக்கான முதலீடுகளை உங்கள் பணியிடத்தில் கேட்பர். அந்த கணக்கின்படி வரி பிடித்தம் செய்யும் கடமை அவர்களுக்கு உண்டு.

என்னுடைய ஆலோசனை என்னவென்றால், இந்த அவசரத்தில் இந்த காரணத்துக்காக புதிய ஆயுள் காப்பீடு அல்லது மருத்துவ காப்பீடு எடுப்பதை தவிர்க்கலாம். ஏற்கனவே சொன்ன மாதிரி உங்கள் பிராவிடன்ட் பண்டு முதலீட்டை அதிகமாக்கலாம்.

மேலும் வரி சலுகைக்காக முதலீடு என்ற முறை மாறப்போவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக புதிய முறை/பழைய முறை (நியூ ரெஜிம்/ ஓல்டு ரெஜிம்) என்று இரண்டு முறையில் வரி கணக்கிடப்பட்டு வருகிறது.

பழைய முறையில் மேலே சொன்னது போல் சில முதலீடுகளில் பணத்தை வைத்து வரி சுமையை குறைத்து கொள்ளலாம்.

புதிய முறையில் வரிச் சுமையை குறைக்க முதலீடுகள் செய்வது என்ற அணுகுமுறை கிடையாது; ஆனால் வரி விகிதம் பழைய முறையை விட குறைவாக இருக்கும்.

நீங்கள் ஓல்டு ரெஜிமில் இன்னும் இருந்தால், வரி சலுகைக்கேற்ற முதலீடு ஏதும் கையில் இல்லாமல் இருந்தால், உங்களுக்கு ஏற்றார் போல் சிங்கிள் பிரீமியம் பாலிசி ஒன்று தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்யலாம்.

அதாவது, ஒரே ஒரு முறை தான் பிரீமியம் கட்ட வேண்டும், மற்றபடி மற்ற டெர்ம்ஸ் படி உங்களுக்கு அந்த பாலிசி பெனிபிட் கிடைக்கும்.

கட்டும் பிரீமியத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு வரி சலுகை கிடைக்கும். ஓய்வூதிய பாலிசிகளுக்கும் இந்த சலுகை உண்டு. சிங்கிள் பிரீமியம் பாலிசிகளை ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள்.

நியூ ரெஜிமுக்கு நீங்கள் மாறியிருந்தால், ஒரு முறை நீங்கள் ஓல்ட் ரெஜிமுக்கு சென்று திரும்பி வர முடியும். அப்படி ஒரு வருடத்திற்கு உங்கள் வரி ரிட்டர்ன் சமர்ப்பிக்கும் முறையை மாற்றி கொண்டு இந்த சிங்கிள் பிரீமியம் பாலிசியை வாங்கி வரி சேமிக்கலாம்.

ஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள்: ஓல்ட் ரெஜிமில் வரிசலுகைகள் கொடுக்கும் முதலீடுகள் இருந்தாலும் வரி விகிதம் அதிகமாக இருக்கும்.

மற்றொன்றும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆயுள் காப்பீடு அல்லது மருத்துவ காப்பீடு என்பது ஒரு தேவையான, அவரவர்க்கு ஏற்றார் போன்ற பாலிசிகளை தேர்ந் தெடுக்கக்கூடிய, ஒரு விஷயமாகும்.

அதை அதனுடைய நன்மைக்காக வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். வரி என்பது என்றிருந்தாலும் கட்ட வேண்டிய ஒன்று. வரி செலுத்தும் முறை, வரி கணக்கிடும் முறை, இன்று ஒரு மாதிரி இருக்கும் நாளை மாறக்கூடும்.

அதனால் இந்த இரண்டு நடவடிக்கைகளையும் வெவ்வேறாக வைத்து, ஒவ்வொன்றையும் அதற்கான தகுதிகளின் அடிப்படையில் முடிவு செய்யுங்கள்.

Source link