போதுமான உரம் கையிருப்பில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள், வினியோகஸ்தர்கள். மேற்காசிய போர் துவங்கியதிலிருந்தே, யூரியா தயாரிக்க பயன்படுத்தப்படும் எல்.என்.ஜி., காஸ் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சில யூரியா உற்பத்தி ஆலைகள் காஸ் தட்டுப்பாடால் மூடப்பட்டுள்ளன அல்லது ஆண்டு பராமரிப்பு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் ஜூன் மாதம் தொடங்கும் கரீப் பருவ விதைப்புக்கு முன்பு உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக இறக்குமதி யூரியாவை பொறுத்தவரை, உலகளவில் இந்தியா தான் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாகும். பெரும்பாலும் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் உரத் தட்டுப்பாடை தவிர்க்கும் வகையில், சீனாவுடன் பேச்சு நடத்தி, யூரியா ஏற்றுமதிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது என மத்திய அரசு, தெரிவித்திருந்தது. ஆனால் சீனா இன்னும் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
உள்நாடு உற்பத்தி, சீன இறக்குமதி ஆகிய இரண்டிலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், தமிழகத்திலும் யூரியாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்ட உர விற்பனையாளர் வீராசாமி கூறுகையில், “எங்களிடம் இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் யூரியா இருப்பு உள்ளது. ஆர்டர் போட்டும் இன்னும் வரவில்லை. வந்தால்தான் விற்பனை செய்ய முடியும். தற்போதைக்கு அதிகளவில் பயிர் சாகுபடி இல்லை. அதனால் யூரியா தட்டுப்பாட்டால் பெரியளவில் பிரச்னை ஏற்படவில்லை,” என்றார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த உர விற்பனையாளர் தெரிவிக்கையில், ”பயிர் சாகுபடியில் யூரியா முக்கியமான பயன்பாடு. அதற்கு அடுத்த நிலையில்தான் டி.ஏ.பி., பொட்டாஷ் போன்ற உரங்கள் விற்பனையாகின்றன. யூரியா பயன்பாடு அதிகம் என்பதால் இருப்பு இல்லை” என்றார்.
திருச்சி மாவட்டத்திலும் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் உரக்கடைகளில் யூரியா கிடைக்காததால், அரசு கூட்டுறவு சொசைட்டிகளை நாடுகிறார்கள் விவசாயிகள். திருச்சி, மொத்த உர விற்பனையாளர் சங்கத்தை சேர்ந்த முத்தையா கண்ணப்பன் கூறியதாவது:
இன்னும் ஒரு மாதத்துக்கு தற்போது இருக்கும் யூரியாவை வைத்து சமாளிக்கலாம். திருச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 5,000 டன் யூரியா உள்ளது.
முன்வர வேண்டும் பயிர்களுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகிய மூன்று விதமான சத்துகள் தேவைப்படுகின்றன. ஆனால், விவசாயிகள் யூரியாவை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். மானிய விலையில் ஒரு மூட்டை யூரியா 266 ரூபாய்க்கு விற்பனையாவதே இதற்கு காரணம். மற்ற உரங்களான டி.ஏ.பி., 1,350 ரூபாய், பொட்டாஷ் 1,800 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. யூரியாவை குறைத்து மற்ற உரங்களை விவசாயிகள் பயன்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
யூரியா உற்பத்தி குறித்து மெட்ராஸ் பெர்ட்டிலைஸர் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “வழக்கமாக என்ன உற்பத்தி நடக்குமோ அந்தளவுக்கு யூரியா உற்பத்தி நடந்து கொண்டிருக்கிறது” என்றனர்.
இது குறித்து தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ்., கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்களில் போதுமான யூரியா இருப்பு உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. தமிழகத்துக்கு தேவையான யூரியா மற்றும் உரங்கள் மத்திய ஒதுக்கீட்டிலிருந்து வந்து கொண்டிருக்கின்றன.உர நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் யூரியா தட்டுப்பாட்டை அரசு கண்காணித்து வருகிறது.
இவ்வாறு கூறினார்.
யூரியா கையிருப்பு: 61.51 லட்சம் டன் இதுவரை இறக்குமதி 98 லட்சம் டன் எதிர்பார்க்கப்படும் இறக்குமதி 17 லட்சம் டன் மொத்த உர கையிருப்பு: 180.12 லட்சம் டன் கடந்த ஆண்டு 131.79 லட்சம் டன் 36.60% அதிகம்.
உரம் கையிருப்பு கடந்த ஆண்டை விட 36.60% அதிகரித்துள்ளது. ரஷ்யா, இந்தோனேசியா, மொராக்கோ, பெலாரஸ் நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க திட்டம் உர தயாரிப்பு ஆலைகளுக்கு குறைந்தபட்சம் 70% எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை
