ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர்: ரஷியா – உக்ரைன் இடையே 32 மணி நேர போர் நிறுத்தம் அறிவிப்பு

ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 11 முதல் 12 வரை 32 மணி நேரத்திற்கு உக்ரைனுடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது.

ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த போர் நிறுத்தம் சனிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்.

இந்தக் காலகட்டத்திற்கு அனைத்துப் பகுதிகளிலும் போர் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் மற்றும் பொதுப் படைத் தலைவர் ஜெனரல் வலேரி கெராசிமோவ் ஆகியோருக்கு ரஷிய அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் எந்தவொரு சாத்தியமான ஆத்திரமூட்டல்களுக்கும் பதிலடி கொடுக்க ரஷிய ராணுவம் தயாராக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் 31 அன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, “ஈஸ்டர் விடுமுறைக்காக நாங்கள் ஒரு போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளோம்.

இந்த முன்மொழிவை அமெரிக்கா ஆதரிக்கும் என்று நம்புகிறோம். மேலும், ரஷியாவின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.” என்று கூறினார்.

ஆனால் ரஷியா பதிலளிக்காததால ஆத்திரமடைந்த ஜெலன்ஸ்கி, “குறைந்தபட்சம் ஈஸ்டர் பண்டிகைக்காவது போர் நிறுத்தம் செய்ய நாங்கள் ரஷ்யாவிற்குப் பலமுறை வாய்ப்பளித்தோம். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை, எல்லாக் காலங்களும் ஒன்றுதான், எதுவும் புனிதமானதல்ல” என்றார்.

இந்நிலையில் ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இதுபோல ஈஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட 30 மணி நேர போர் நிறுத்தம் பாதியில் முறிந்தது.

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேரும் முயற்சியை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய உக்ரைன் – ரஷிய போர் 4 ஆண்டுகளை கடந்து தீர்வின்றி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் என்பது கிழக்கு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களால் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடும் முக்கியமான பண்டிகையாகும்.

இது மேற்கத்திய கத்தோலிக்க ஈஸ்டர் தேதிகளில் இருந்து மாறுபட்டு, ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றி ஏப்ரல் 4 முதல் மே 8 க்கு இடைப்பட்ட காலத்தில் வரும்.

Source link