புதுடில்லி: ‘நம் ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாக வெளியான வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவியது.
உண்மை தன்மை
அதில், ‘நம் ராணுவத்தில், ஹிந்துக்கள் அல்லாதோரை வரும் 2028ம் ஆண்டுக்குள் நீக்காவிட்டால், பிரதமர் மோடி வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் யோகி ஆதித்யநாத் அமர்த்தப்படுவார்’ என, மோகன் பாகவத் பேசியதாக காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், உண்மை கண்டறியும் குழு மூலம், அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தது.
இதையடுத்து, ‘நம் ராணுவத்தை காவிமயமாக்க வேண்டும் என மோகன் பாகவத் பேசிய வீடியோ பதிவு போலியாக உருவாக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளது.
இது குறித்து பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட விளக்கம்:
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ போலியானது.
பொய் தகவல்
ராணுவத்தில் உள்ள ஹிந்துக்கள் அல்லாத 50 சதவீத வீரர்களை நீக்குமாறு, பிரதமர் மோடிக்கு அவர் வலியுறுத்துவதாக வெளியான வீடியோ, வதந்தி பரப்புவதற்காக டிஜிட்டல் முறையில் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதில் உண்மை இல்லை. அந்த வீடியோ முழுக்க முழுக்க போலியானது.
பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில், போலியான வீடியோக்கள் வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. பொய் தகவல் வெளியிடுவதை, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இத்தகைய போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவினால், அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் குறித்து, ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட நகல்கள் ‘டெலிகிராம்’ தகவல் பரிமாற்ற செயலியில் வெளியான நிலையில், அதுவும் போலியான புகைப்படங்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
