ஆற்காடு: துாக்கத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் பா.ஜ.,வை நினைத்து பயப்படுகிறார் என பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை ஆதரித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இபிஎஸ் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும். தி.மு.க., ஆட்சியை போல, மோசமான ஆட்சியை நாம் இதுவரை பார்க்கவில்லை. தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும்.
420 தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும். கள்ளச்சாராய வியாபாரியை சமூக விரோதி என்பார்கள். தமிழக அரசுக்கு சாராயத்தை வழங்குபவரை தான் உங்கள் எம்.பி., என்கிறீர்கள். தி.மு.க.,வுக்கு ஓட்டு போட ஒரு காரணம் கூட ஸ்டாலினால் சொல்ல முடியாது.
5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை. நமது பக்கத்து மாவட்டத்தில், 2 1/2 வயது குழந்தையை தி.மு.க., பொறுப்பாளர் வன்கொடுமை செய்து கொன்றான். பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் கஞ்சா, சாராயம், சின்ன பெண்கள் கிடைப்பார்கள் என பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கூறுகிறான்.
தாய்மார்களின் பாதத்தில் விழுந்து கேட்கிறேன். தயவு செய்து தி.மு.க.,வை விரட்டி அடியுங்கள். நானும் மூன்று பெண் குழந்தைகளை பெற்றவன். மானங்கெட்ட தி.மு.க., வை பெற்றோர்கள் விரட்டி அடிக்க வேண்டும். தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோ. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை குப்பையில் போட வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையின்படி, 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் வாங்க தி.மு.க.,வினருக்கு லஞ்சம் வழங்க வேண்டும். ஐந்து ஆண்டு காலமாக குப்பை ஆட்சி நடக்கிறது.
ராணிப்பேட்டை தொகுதியில் மகாத்மா காந்தி உள்ளார். பெயர் தான் காந்தி. செய்கிற வேலை எல்லாம் 420. ராணிப்பேட்டை சிப்காட்டில், 2 1/2 லட்சம் டன் குரோமிய கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. நிலத்தடி நீரில் 270 மி.லி. கிராம் குரோமிய கழிவு உள்ளது. குரோமிய கழிவு நீரை குடித்தால் புற்றுநோய், மனநோய் தான் வரும். பா.ஜ., வை பார்த்தால் ஸ்டாலினுக்கு பயமா?. துாக்கத்தில் கூட ஸ்டாலின் பா.ஜ.,வை நினைத்து பயப்படுகிறார்.
மத்திய அரசிடம் நிதி கேட்டு பெற ஸ்டாலினுக்கு துப்பு இல்லை. ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக வெளிமாநிலங்களில் இருந்து 1 1/2 லட்சம் கிலோ கஞ்சா விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. ஸ்டாலினை சுற்றி எ.வ.வேலு, சேகர்பாபு, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு என நான்கு வியாபாரிகள் உள்ளனர். தி.மு.க., என்கிற திருடனை ஊராக சேர்ந்து விரட்டி அடியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
