ஆற்காடு ரோட்டில் நெருக்கும் டிராபிக்: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் வரும் செப்டம்பரில் தான் – poonamallee to vadapalani metro rail delay with 6 stations on sept pushes commuters to arcot road

பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ பணிகள் தாமதம்

இந்த சேவையானது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்தின் கீழ் வருகிறது. இதனை மஞ்சள் வழித்தடம் (Yellow Line) என்று அழைக்கின்றனர். கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை மொத்தம் 27 ரயில் நிலையங்கள் உடன் 26 கிலோமீட்டர் தூரம் கொண்டது.

முதல்கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை – வடபழனி இடையிலான 14 கிலோமீட்டர் தூர மெட்ரோ ரயில் சேவையை திறக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்கிடையில் 17 ரயில் நிலையங்கள் வருகின்றன. ஆனால் 6 ரயில் நிலையப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

வடபழனி ரூட்டில் 6 ஸ்டேஷன்கள் இழுபறி

எஞ்சிய ரயில் நிலையங்களில் பணிகள் முடிந்துவிட்டதால், அந்த சேவையை விரிவாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். முதலில் திறப்பு விழா குறித்த ஆலோசனையில் தீவிரம் காட்டினாலும், கடைசியில் எஞ்சிய 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்றால் மட்டுமே ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறும் எல்லோ லைன் மெட்ரோ ரயில் நிலையங்கள்

சாலி கிராமம் விருகம்பாக்கம் தெற்கு ஆழ்வார் திருநகர் வளசரவாக்கம் காரம்பாக்கம் ஆலப்பாக்கம்

இதன் பின்னணி காரணம் குறித்து மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்கையில், முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டால் எஞ்சியுள்ள பணிகள் நடைபெறுவதில் இழுபறியாகும். ஏனெனில் பிளாட்பார்ம் லெவல் மற்றும் வழித்தடம் 5ல் வேலையாட்கள் நுழைவது சவாலாக இருக்கும். இவை டபுள் டெக்கர் வகையிலான ரயில் நிலையங்களாக இருக்கும். ரயில்கள் இயங்கி கொண்டிருக்கும் போது குறுக்கே எப்படி வேலை செய்வது எனக் கேட்கின்றனர்.

சென்னை மெட்ரோ பணிகளில் பெரிய சிக்கல்

அதிலும் குறிப்பாக ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் மேற்கூரை முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனை ரயில்கள் இயக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் எப்படி அமைப்பது. மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும் என்கின்றனர். இடையில் மின்சாரத்தை துண்டித்து விட்டு வேலை செய்ய வேண்டி வரும். அது சாத்தியமில்லை.

உயர்மட்ட அளவில் அதிக அழுத்தம் கொண்ட மின்சார கேபிள்களை பொருத்த வேண்டும். அது சாத்தியமில்லை. டிக்கெட் வழங்கும் அறைகள், தொலைத்தொடர்பு சேவை, யுபிஎஸ், சிக்னலிங், துணை மின் நிலையங்கள் ஆகியவற்றின் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் மேற்கூரை, ரயில் நிலைய நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள், கழிவறைகள், கிரானைட் தரைத்தளம் ஆகியவற்றின் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

ஆற்காடு ரோட்டில் மீண்டும் டிராபிக்

மெட்ரோ ரயில் திட்டத்தில் வேலை செய்வோரில் பெரும்பாலானோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் சொந்த ஊர் பயணம் காரணமாக அடுத்தடுத்து பணிகள் தாமதமாகி வருகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஆற்காடு ரோட்டில் தவழ்ந்த படியே வாகனங்களை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு வாகன ஓட்டிகள் தள்ளப்படுகின்றனர். விரைவாக பணிகளை முடித்து முதல் பாதி எல்லோ லைன் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.

Source link