ஆற்றில் மூழ்கிய பேருந்து: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வங்கதேசத்தின் டாக்கா அருகே உள்ள ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள பத்மா ஆற்றின் தௌலதியா படகு முனையத்திற்கு நேற்று (25.03.2026) மாலை 05:15 மணியளவில் சுமார் 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றது. அதன்படி பேருந்து தௌலதியா படகு முனையத்தின் 3வது தங்கு தளத்தில், இருந்து டாக்காவை நோக்கிச் சென்றபோது, படகில் ஏற முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மிதவைப் பாலத்திலிருந்து ஆற்றிற்குள் விழுந்தது. 

இதனையடுத்து இந்த பேருந்து சுமார் 30 அடி ஆழத்தில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த உடனே, பேருந்தில் இருந்த  பயணிகள் சிலர் ஆற்றில் இருந்து நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். இருப்பினும் பலர் மூழ்கிய பேருந்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர். மற்றொருபுறம் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறை குழுவினர் மற்றும் படகு போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர் . 

இந்நிலையில் இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. பேருந்தில் இருந்த 11 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளதாக வங்க தேச அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் பேருந்து படகில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது, ஒரு சிறிய படகு மிதவைப் பாலத்தின் மீது மோதியதால் இந்த விபத்து நேரிட்டது எனக் கூறப்படுகிறது. ஆற்றில் பேருந்து விழுந்த விபத்தில் சிக்கி 23 பயணிகள் உயிரிழந்த சம்பவம் வங்காள தேசத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link