மதச் சடங்கிற்காக நர்மதா ஆற்றில் 11ஆயிரம் லிட்டர் பால் ஊற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், சிஹோர் மாவட்டத்தில் உள்ள பேருண்டா பகுதியில் அமைந்துள்ள சத் தேவ் கிராமத்தில் ஸ்ரீ தாதாஜி தர்பார் பாதலேஷ்வர் மகாதேவ் கோவில் ஒன்று உள்ளது. பிரபலமான இந்த கோவிலில் கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை 21 நாட்கள் மத விழா நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவாக, இறுதி நாளின் போது 41 டன் நெய்யைப் பயன்படுத்தி பிரம்மாண்டமான மகாயாகம் மற்றும் புனிதப்படுத்தும் சடங்குகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக இங்குள்ள நர்மதை ஆற்றில் வேதமந்திரங்கள் முழங்க 11ஆயிரம் லிட்டர் பாலை கோவில் நிர்வாகம் ஊற்றினர்.
ஆற்று நீரின் தூய்மை, யாத்ரீகர்கள் நல்வாழ்வு மற்றும் செழிப்பு ஆகியவற்றை வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளின் ஒரு பகுதியாகவே இந்த பால் நதிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த சம்பவத்துக்குக் கவலை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பெருமளவிலான கரிமப்பொருட்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனின் அளவை குறைத்து நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடும். அதோடு, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கால்நடைகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும் ஒரு நாட்டில், இத்தகைய செயல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான பாலை, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
