சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் தலைமையை எதிர்த்த தலைவர்கள், ஆளுக்கொரு திசைக்கு சென்றுள்ள நிலையில் , வரும் சட்டசபை தேர்தல், அ.தி.மு.க.,வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக மாறியுள்ளது. கட்சி இனி என்னாகுமோ என்ற கவலையில் தொண்டர்கள் ஆழ்ந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட குழப்பங்களாலும், சசிகலா சிறை சென்றதாலும், 2017 பிப்ரவரி 16ல் பழனிசாமி முதல்வரானார். சசிகலா, தினகரனுடன் பழனிசாமிக்கு மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, 2017 ஆகஸ்டில் பன்னீர்செல்வத்தை, மீண்டும் கட்சியில் இணைத்து துணை முதல்வராக்கினார்.
கடும் கோபம்
அதன்பின், 2022 ஜூலை வரை பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் அ.தி.மு.க., செயல்பட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.
பழனிசாமியின் தலைமையை எதிர்த்த பன்னீர்செல்வம், அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை துவங்கி, சட்டப் போராட்டம் நடத்தினார். அவருடன் இணைந்து செயல்படாவிட்டாலும் சசிகலா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர், பழனிசாமி தலைமையை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினர்.
கடந்த 2025, அக்டோபர் 30ம் தேதி, பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையின்போது, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசினர். இவர்கள் நான்கு பேரும் இணைந்து, பழனிசாமியை எதிர்ப்பர் என பலரும் எதிர்பார்த்தனர். குறிப்பாக, பழனிசாமி எதிர்பார்த்தார்.
அதற்கேற்ப, அ.தி.மு.க.,வில் இருந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, செங்கோட்டையன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார். இதனால் செங்கோட்டையன் மீது கடும் கோபம் அடைந்த பழனிசாமி, அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இதையடுத்து செங்கோட்டையன், கடந்த ஆண்டு நவம்பரில் த.வெ.க,வில் இணைந்தார். பழனிசாமி முதல்வராவதை ஏற்க மாட்டேன் எனக் கூறி வந்த தினகரன், பா.ஜ., தலைவர்களை சந்தித்து, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரி வந்த சசிகலா, தனிக் கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அவர், த.வெ.க., வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க காய் நகர்த்தி வருகிறார். அதைத் தொடர்ந்து, பன்னீர் செல்வம் நேற்று தி.மு.க., வில் இணைந்துள்ளார்.
இப்படி பழனிசாமி தலைமைக்கு சவால் விட்டு வந்தவர்கள், ஆளுக்கொரு திசைக்கு சென்று விட்டதால், அ.தி.மு.க.,வில் பழனிசாமியின் தலைமை உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், பிரிந்து சென்றவர்களால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை, வரும் சட்டசபை தேர்தல் தான் தீர்மானிக்கும்.
அ.தி.மு.க., தலைவர்கள் சிலர் வேதனையுடன் கூறியதாவது: அ.தி.மு.க., பலமான கட்டமைப்பு கொண்ட கட்சி தான். இருந்தாலும், ஒவ்வொரு தலைவரும் தொண்டரும் கட்சிக்கு முக்கியம் என்பதால் தான், ஜெயலலிதா மறைவுக்குப் பின், பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்று பட வேண்டும் என, குரல் எழுப்பப்பட்டது.
ஆனால், இத்தகைய குரலை யார் எழுப்பினாலும், அவர்களை பழனிசாமி எதிரியாகக் கருதினாரே தவிர, அரவணைக்கவில்லை. அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். இருந்தபோதும், பன்னீர் செல்வம் மட்டும், தொடர்ந்து அதையே வலியுறுத்தினார்.
கொந்தளிப்பு
தேர்தல் நெருக்கத்திலும், பழனிசாமி தன் நிலையில் இருந்து இறங்கி வராத நிலையில், தன் அரசியல் எதிர்காலம் கருதி, பன்னீர்செல்வம் தி.மு.க.,வுக்கு சென்று விட்டார். தி.மு.க., பக்கம் சென்றதும், அவரை அ.தி.மு.க.,வினர் கடுமையாக விமர்சிக்கின்றனர். அவரால், தேர்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அ.தி.மு.க., கருதினால், தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணைந்ததை கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கலாம்.
ஆக, பன்னீர்செல்வத்தின் முடிவு, தேர்தலில் பாதிக்கும் என்ற அச்சம், அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான், பன்னீர்செல்வத்துக்கு எதிரான கடுமையான கொந்தளிப்பு. இவ்வாறு அந்த தலைவர்கள் கூறினர்.
