ஆளுங்கட்சி தொழிற்சங்க டிரைவர், கண்டக்டர்கள் இனி 'ஓபி' அடிக்க முடியாது: 'கிடுக்கிப்பிடி' போட்டது உயர் நீதிமன்றம்

மதுரை : ‘தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில், ஆளுங்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு, இனி இதர பணி என்ற பெயரில் எந்த நிர்வாக பணியும் வழங்கக்கூடாது. இதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அரசு போக்குவரத்து கழக மதுரை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் கனகசுந்தர், 2019ல் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில், அப்போதைய ஆளுங்கட்சியின் அண்ணா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த சில டிரைவர், கண்டக்டர்கள், இதர பணி என்ற பெயரில், எந்த வேலையும் செய்வதில்லை.ஆனால், வேலை செய்ததாக வருகைப்பதிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கு சம்பளம், படிகளாக மாதம், 60 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகத்திற்கு இது மேலும் இழப்பை ஏற்படுத்துகிறது. இதர பணி என்ற பெயரில், ஆளுங்கட்சியை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு வழங்கப்படும் சலுகையை நிறுத்தி வைக்க வேண்டும். அவர்களுக்குரிய பணியில், அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதர பணியில் ஈடுபடுத்தி, சம்பளம் வழங்குவதை தவிர்க்க வலிறுத்தி, தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமை செயலர், மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர், மதுரை மண்டல பொது மேலாளருக்கு 2018ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராகுல்: இம்மனு முந்தைய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அதே நிலைமை தற்போதும் தொடர்கிறது. 264 டிரைவர், கண்டக்டர்களை அவர்களுக்கான பணியில் ஈடுபடுத்துவதில்லை.இதர பணி என்ற பெயரில் நிர்வாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, 2025ல் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்க உறுப்பினர்களே எந்த பணியும் செய்யாமல் சம்பளம் பெற்று வருகின்றனர்.இவ்வாறு அவர் வாதாடினார். அரசு கூடுதல் வழக்கறிஞர் அசோக், ‘இனிமேல் டிரைவர், கண்டக்டர்கள், நிர்வாக பணிக்கு பயன்படுத்தப்படமாட்டார்கள்’ என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தகவல் அறியும் உரிமை சட்டப்பட்டி வழங்கிய தகவல், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களாக நியமிக்கப்பட்ட நபர்களுக்கு இதர பணி வழங்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அதே சமயம், மதுரை மண்டலத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களில், தற்காலிக டிரைவர்களை, ‘அவுட்சோர்சிங்’ முறையில் நியமிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. 362 காலி பணியிடங்களை, அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப திட்டமிட்டுள்ளனர். நிரந்தர பணியாளர்கள் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பதவியில் நியமிக்கப்பட்டிருந்தும், அவர்களை நிர்வாக பணி என்ற பெயரில் இதர பணியில் ஈடுபடுத்துவது சரியானது அல்ல. ஆட்சியில் உள்ள எந்த அரசியல் கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு, இனிமேல் இதர பணி என்ற பெயரில் எந்த நிர்வாக பணியும் வழங்கப்படக்கூடாது. இந்த உத்தரவை மீறினால், எந்த தொழிலாளரும் அல்லது எந்த தொழிற்சங்கமும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Source link