நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ஏராளமான விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இவ்விவகாரம் தொடர்பாக கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் இச்சம்பவம் தொடர்பாக வாய் திறக்காமல் இருப்பது என்ற கேள்விகளையும் முன்வைத்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்த விவகாரம் சம்பந்தமாக கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டுமென அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இப்படியான நிலையில் இன்றைய தினம் பட்டமளிப்பு விழாவில் வந்தே மாதரம் முதலிலும், தேசிய கீதம் இரண்டாவதாகவும் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழத்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன், முதல்வர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது சம்பந்தமாக அவர் பேசுகையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவரின் பெயரை தாங்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் அவர் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடமில்லை. மரியாதை இல்லை என்கின்ற போது ஒரு தமிழனாக வேதனைப்படுகிறேன். வெட்கி தலை குனிகிறேன் என தெரிவித்துள்ளார். அதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஒரு தனித்த ஆட்சியை இம்மண்ணில் ஆளுநர் செலுத்தி வருகிறார் என்று பகிரங்கமாக நான் குற்றம்சாட்டுகிறேன்.
ஆய்வுக்கு செல்கிறார். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்னை வந்து பாருங்கள் என்கிறார். தொடர்ச்சியாக அவருடைய நடவடிக்கை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்றத்தை அவமதிப்பதை போன்று உள்ளது. ஒன்றிய அரசு அந்தந்த மாநிலங்களில் அவர்களின் தாய்மொழி பாடல்களை பாடிக் கொள்ளலாம். அதன்பின்னர் இசைக்கப்படும் பாடல்கள் குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்தது.
அதன்படி பார்த்தால் கூட அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழத்து இடம்பெற்றிருக்க வேண்டும். அதனை செய்ய மறுத்து, ஆளுநர் செயல்படுவதை தவாக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார் வேல்முருகன். அதோடு ஆளுநரின் தொடர்ச்சியான அட்டுழியங்கள், அக்கிரமங்கள், தமிழர் விரோத நடவடிக்கைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என முதல்வரை நோக்கி கேள்வியை முன்வைத்துள்ளார்.
அதோடு எதிர்க்கட்சிகள் சொல்வதை போன்று ஒன்றிய பாஜக தான், உங்கள் அரசை நடத்துகிறதா? ஏன் உங்களின் மௌனம் கலைக்கப்படவில்லை. இதுபோன்ற விவகாரங்களில் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இதையெல்லாம் குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை பதிலளிக்க மறுக்கிறீர்கள் எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை வேல்முருகன் எழுப்பியுள்ளார்.
மேலும், இதில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய அரசாங்கத்தை தொடர்ந்து ஆளுநர் தலையிடுவது குறித்து எப்போது வாய் திறப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்புகிறேன் என தெரிவித்துள்ளார் வேல்முருகன். முதல்வர் நோக்கி அவர் எழுப்பியுள்ள இந்த கடும் கேள்விகள் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இதனையடுத்து இவ்விவகாரத்தில் தனது கடுமையான கண்டன குரலை முதல்வர் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
