சென்னை:’மரைன் டெக், ரூரல் டெக், அக்ரி டெக், கிளைமேட் டெக்’ ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள, ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களுக்கு உதவ, சர்வதேச தரத்தில் திறன்மிகு மையங்களை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மையம் ஒவ்வொன்றும் தலா 2.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள, ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு மற்றும் சந்தை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் செய்கிறது.
பல்வேறு துறைகளில், ‘டீப் டெக்’ எனப்படும் ஆழ்நிலை தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, தங்களின் தயாரிப்பு வடிவமைப்பு, மாதிரி உற்பத்தி போன்றவற்றுக்கு சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றன. இதற்காக தமிழகத்தில், திறன்மிகு மையங்களை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக, ‘மரைன் டெக், ரூரல் டெக், அக்ரி டெக், கிளைமேட் டெக்’ ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள, ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களுக்காக திறன்மிகு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவை, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்படுகின்றன.
ஒரு மையத்தின் திட்ட செலவு, 2.50 கோடி ரூபாய். இதில் தமிழக அரசின் பங்கு, 1 கோடி ரூபாய். கல்வி நிறுவனத்தின் பங்கு, 1 கோடி ரூபாய், தொழில் நிறுவனத்தின் பங்கு, 50 லட்சம் ரூபாய் ஆகும்.
