'ஆவண குளறுபடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பல்ல' – உயர் நீதிமன்றம் அதிரடி

‘நிறுவனங்கள் உரிய ஆவணங்களை பராமரிக்க தவறியதற்காக, தொழிலாளர்களின் பி.எப்., ஓய்வூதிய கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

‘கிரண் ராஜாராம் ஜாதவ்’ என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘நிர்வாக குளறுபடிகளுக்காக தொழிலாளர்களை பலிகடா ஆக்கக்கூடாது; ‘பார்ம் 6ஏ’ போன்ற ஆவணங்களை பராமரிப்பது நிறுவனங்களின் பொறுப்பு. அவை இல்லை என்ற காரணத்தை சொல்லி ஓய்வூதியத்தை மறுப்பது செல்லாது’ என உத்தரவிட்டுள்ளது.

ஏதேனும் ஒரு ஆவணம் இல்லை என்பதற்காக கோரிக்கையை நிராகரிக்காமல், அதற்கு பதிலாக, ‘பார்ம் 3ஏ’, பி.எப்., கணக்கு அறிக்கைகள், பங்களிப்பு விபரங்கள் மற்றும் நிறுவனத்தின் உறுதிமொழி போன்ற மாற்று ஆதாரங்களை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்து, இ.பி.எப்.ஓ., அமைப்பு முடிவெடுக்க வேண்டும் என்றும், மிகவும் நுணுக்கமான தொழில் நுட்ப காரணங்களை தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்த கூடாது எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறியதாவது:

தற்போதைய உயர் நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள்காட்டி, ஆவணங்கள் இல்லை என ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிக்கலாம். நிறுவனங்கள் தொழிலாளர்களின் பி.எப்., தொகையை செலுத்துவதோடு மட்டும் நிறுத்திவிடாமல், அதற்கான ஆவணங்களை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, டிஜிட்டல் முறைக்கு மாறுவதற்கு முந்தைய காலகட்டத்தின் தரவுகளை சரியாக பராமரிக்க தவறினால், அது பிற்காலத்தில் தேவையற்ற சட்ட சிக்கல்களை உருவாக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link