ஆஷா போஸ்லே மறைவு; உருக்கமுடன் வீடியோ வெளியிட்ட இளையராஜா

இந்திய திரையுலகில் தனித்துவமான குரல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி ஆஷா போஸ்லே(92). கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக தமிழ், இந்தி, மராத்தி, பெங்காலி என மொத்தம் 20 மொழிகளில் 12,000-க்கும் மேலான பாடல்களை பாடியவர். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். மேலும் இந்திய நாட்டின் உயரி விருதுகளின் ஒன்றான பத்ப விபூஷன் விருதையும் வென்றுள்ளார். 

இவர் சமீபத்தில் மாரடைப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று(12.04.2026) திடீரென அவர் காலமானார். இவரது இழப்பு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், முன்னணி திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 4 மணிக்கு மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் இவரது மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்திய திரைப்படவுலகில் பெரும் புகழ் படைத்த ஆஷா போஸ்லா மறைவை கேட்டு மிகவும் துயரமுற்றேன். இது மற்றவர்களுக்கு சொல்லப்படுவது போல் ஒரு இரங்கல் செய்தி அல்ல. அவர் என் மீது எவ்வளவு பாசமும் அன்பும் வைத்திருந்தார் என்பதையும் ஒரு பின்னணி பாடகியாக என்னிடம் எவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டார் என்பதையும் என்னால் மறக்க முடியாது. என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே. அவருடைய திறமைக்கு அளவே இல்லை. அவரது குரல் வேறு எந்த குரலோடும் ஒப்பிடமுடியாத தனித்துவம் வாய்ந்த குரல். தனித்துவத்தோடு திறமையும் இருக்கும். எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னை சந்தித்துவிட்டு செல்வார். அவருடைய குரலை திரையுலகம் மறக்காது” என்றார். 

தமிழில் ஆஷா போஸ்லே மொத்தம் 20 பாடல்கள் தான் பாடியுள்ளார். அதில் இளையராஜா இசையில் தான் அதிகம் பாடியுள்ளார். அதில் வெளியான‘செண்பகமே செண்பகமே…’, ‘ஓ… பட்டர்ஃப்ளை’, ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி…’, ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம், கொஞ்சி பேச கூடாதா’ போன்ற பாடல்கள் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. 



Source link