ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா: இரண்டாவது 'டி-20' போட்டியில்

கான்பெரா: இரண்டாவது ‘டி-20’ போட்டியில் இந்திய பெண்கள் அணி, 19 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. கான்பெராவில் 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா, பெத் மூனே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜார்ஜியா, 32 பந்தில் அரைசதம் கடந்தார். அருந்ததி பந்தில் பெத் மூனே (46) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய அருந்ததி ‘வேகத்தில்’ ஜார்ஜியா (88 ரன், 11×4, 1×6) வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. ஆஷ்லே கார்ட்னர் (10) அவுட்டாகாமல் இருந்தார்.

ஹர்மன்பிரீத் ஆறுதல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷைபாலி வர்மா (29), ஸ்மிருதி மந்தனா (31) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (4) நிலைக்கவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (36) ஓரளவு கைகொடுத்தார். ரிச்சா கோஷ் (19) ஆறுதல் தந்தார். மற்ற வீராங்கனைகள் ஏமாற்றினர்.

இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 144 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர் முதலிடம்

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 356 போட்டியில் (189 ‘டி-20’, 161 ஒருநாள், 6 டெஸ்ட்) பங்கேற்றுள்ளார். அடுத்த நான்கு இடங்களில் நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் (355 போட்டி), ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி (349), இந்தியாவின் மிதாலி ராஜ் (333), இங்கிலாந்தின் சார்லோட்டி எட்வர்ட்ஸ் (309) உள்ளனர்.

Source link