ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்தியா: புரோ லீக் ஹாக்கியில் ஏமாற்றம்

ஹோபர்ட்: புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 4-5 என, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

ஆண்களுக்கான புரோ லீக் ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா அணிகளுடன் விளையாடுகிறது.

ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்தியா சார்பில் அமித் ரோஹிதாஸ் (15வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (43வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு ஜோயல் ரின்டாலா 2 கோல் (47, 56வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார்.

போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டன. இந்தியா சார்பில் ஷிலானந்த் லக்ரா, மனிந்தர் சிங், ராஜ் குமார் பால், ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தனர். ஆதித்யா அர்ஜுன் மட்டும் ஏமாற்றினார். முடிவில் இந்திய அணி 4-5 என, அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இதுவரை விளையாடிய 6 போட்டியிலும் தோல்வியடைந்த இந்தியா, 8வது இடத்தில் உள்ளது. அடுத்து ஸ்பெயினை (பிப். 24) எதிர்கொள்கிறது.

Source link