ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எப்போது முடிவு பெரும் என்ற எந்த அறிகுறியும் இல்லாமல் இந்த போர் நாளுக்குநாள் உக்கிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளும் பலவகையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழலிலும், ஈரானுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக, சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் வெளிப்படையான ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள மக்களும் ஈரானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். இதற்கு ஈரான் தூதரகமும் நன்றி தெரிவித்திருந்தது. இதனிடையே, அமெரிக்காவில் உள்ள பொதுமக்கள் இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென அமெரிக்காவிற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் எழுதிய கடிதத்தில், ” ஈரான் – அமெரிக்கா இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் இருந்தாலும், அமெரிக்க மக்களிடையே ஈரான் எந்தவித மோதல் போக்கையும் கொண்டிருக்கவில்லை. ஈரான் மக்கள் அமைதியையும், தன்மானத்தையும் விரும்புபவர்கள். ஈரானிய மக்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா அல்லது அண்டை நாடுகளின் மக்கள் உட்பட மற்ற எந்த நாடுகளின் மீதும் எந்த விரோதமும் இல்லை. ஆனால், தற்போது இஸ்ரேலின் தூண்டுதலால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபட்டுவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
