இங்கிலாந்து அணி 'கிரேட் எஸ்கேப்': கடைசி பந்து வரை பயம் காட்டிய நேபாளம்

மும்பை: பரபரப்பான ‘டி-20’ உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்றது. கடைசி பந்து வரை போராடிய நேபாள அணி, வாய்ப்பை கோட்டைவிட்டது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘சி’ பிரிவு லீக் போட்டியில் நேபாளம், இங்கிலாந்து அணிகள் மோதின.

பெத்தேல் அரைசதம்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (1) ஏமாற்றினார். அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல், ஷேர் மல்லா வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். நந்தன் யாதவ் ‘வேகத்தில்’ பட்லர் (26) வெளியேறினார். டாம் பான்டன் (2) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 57/3 ரன் எடுத்து திணறியது.பின் இணைந்த பெத்தேல், கேப்டன் ஹாரி புரூக் ஜோடி கைகொடுத்தது. பெத்தேல், 28 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது திபேந்திரா சிங் பந்தில் பெத்தேல் (55) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய திபேந்திரா பந்தில் சாம் கர்ரான் (2) அவுட்டானார்.

நந்தன் யாதவ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய புரூக், 31 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 53 ரன்னில் நந்தன் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் (1) ‘ரன்-அவுட்’ ஆனார். கரண் வீசிய கடைசி ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்டார் வில் ஜாக்ஸ். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. ஜாக்ஸ் (39) அவுட்டாகாமல் இருந்தார்.

திபேந்திரா அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய நேபாள அணிக்கு ஆசிப் ஷேக் (7) ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2வது ஓவரில், 3 பவுண்டரி விரட்டிய குஷால் புர்தெல் (29) ஆறுதல் தந்தார். பின் இணைந்த கேப்டன் ரோகித், திபேந்திர சிங் ஜோடி நம்பிக்கை தந்தது. வில் ஜாக்ஸ், அடில் ரஷித் ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டினார் ரோகித். மறுமுனையில் அசத்திய திபேந்திரா சிங், அடில் ரஷித் வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது சாம் கர்ரான் பந்தில் திபேந்திரா (44) அவுட்டானார். லியாம் டாசன் பந்தில் ரோகித் (39) வெளியேறினார்.

கர்ரான் கலக்கல்: ஆரிப் ஷேக் (10) நிலைக்கவில்லை. சார் கர்ரான் வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய லோகேஷ் பாம், ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன. சாம் கர்ரான் பந்துவீசினார். துல்லியமாக வீசிய கர்ரான், 5 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

நேபாள அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. லோகேஷ் பாம் (39) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 2 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை வில் ஜாக்ஸ் வென்றார்.

பட்லர் ‘நம்பர்-3’

இங்கிலாந்தின் பட்லர், ‘டி-20’ உலக கோப்பை அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயவர்தனாவை (1016 ரன்) முந்தி 3வது இடம் பிடித்தார். இதுவரை 36 போட்டியில், 1039 ரன் எடுத்துள்ளார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் கோலி (1292 ரன்), ரோகித் (1220) உள்ளனர்.

Source link