கொழும்பு: ‘டி-20’ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்-8’ சுற்றில், இங்கிலாந்து அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. நேற்று நியூசிலாந்தை 4 விக்கெட்டில் வென்றது.
இலங்கையின் கொழும்புவில் நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான, ‘சூப்பர்-8’ போட்டியில் (பிரிவு 2) ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை சந்தித்தது.
இதில் வென்றால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து, பேட்டிங் தேர்வு செய்தது.
சூப்பர் துவக்கம்
நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பர்ட், பின் ஆலன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 64 ரன் சேர்த்த நிலையில் செய்பர்ட் (35), அடில் ரஷித் சுழலில் சிக்கினார். அடுத்த சில நிமிடத்தில் பின் ஆலன் (29), ஜாக்சிடம் சிக்கினார்.
ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாற, பந்தில் அதிக திருப்பம் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க திணறினர். ரஷித் பந்தில் சாப்மென் (15) அவுட்டாக, லியாம் டாசன் சுழலில் வீழ்ந்தார் டேரில் மிட்செல். அவ்வப்போது பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்த கிளன் பிலிப்ஸ், 28 பந்தில் 39 ரன் எடுத்து கைகொடுத்தார்.
மெக்கன்சி 14 ரன் எடுத்தார். கடைசி பந்தில் கேப்டன் சான்ட்னர், ஒரு சிக்சர் அடித்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159/7 ரன் மட்டும் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித், ரேஹன் அகமது, ஜாக்ஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஜாக்ஸ் அபாரம்
இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் பில் சால்ட் (2) அவுட்டானார். பெர்குசன் வீசிய 2வது ஓவரின் 2வது பந்தில் அனுபவ பட்லர் ‘டக்’ அவுட்டானார்.
பிலிப்ஸ் பந்தில் கேப்டன் ஹாரி புரூக் (26), வெளியேறினார். தன் பங்கிற்கு பந்தை சுழற்றிய ரச்சின், பெத்தெல் (21), சாம் கர்ரான் (24), பான்டனை (33) திருப்பி அனுப்பினார்.
பிலிப்ஸ் வீசிய 18 வது ஓவரில் 22 ரன் எடுக்கப்பட, இங்கிலாந்து பக்கம் வெற்றி திரும்பியது. கடைசியில் ஜாக்ஸ் ஒரு பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் 161/6 ரன் எடுத்தது. ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தானை சாய்த்த இங்கிலாந்து, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. ஜாக்ஸ் (32), ரேஹன் அகமது (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
யாருக்கு வாய்ப்பு
‘சூப்பர்-8’ சுற்று பிரிவு 2ல் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி (6 புள்ளி), முதல் இடம் பிடித்தது. நியூசிலாந்து (3 புள்ளி, 1.390), பாகிஸ்தான் (1, -0.461) அணிகள் அடுத்த இரு இடத்தில் உள்ளன.
* இன்று நடக்கும் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் மோதுகின்றன. இப்போட்டியின் முடிவுக்கு ஏற்ப நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லலாம். இலங்கை அணி ஏற்கனவே வெளியேறி விட்டது.
