புதுடில்லி மேற்காசிய போர் காரணமாக எல்.பி.ஜி.,க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், மின்சார அடுப்பான இண்டக் ஷன் ஹீட்டர்கள் மற்றும் அதில் பயன்படுத்துவதற்கு ஏற்ற பாத்திரங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ள சூழலில், அவற்றின் தயாரிப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது.
இதுகுறித்து அந்த ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் கூறியது:
மேற்காசிய போரால் சர்வதேச எரிவாயு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நம் நாட்டில் எல்.பி.ஜி.க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், மக்கள் இண்டக் ஷன் அடுப்புகள், பாத்திரங்கள், மின்சார குக்கருக்கு தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ப அவற்றின் சப்ளை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில், இது தொடர்பான அரசு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பீயூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், மின்துறை செயலர் பங்கஜ் அகர்வால், வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் லவ் அகர்வால், தொழில் மேம்பாட்டு துறை செயலர் அமர்தீப் சிங் பாட்டியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில், இன்டக் ஷன் அடுப்புகள் மற்றும் அதற்கான பாத்திரங்களின் தயாரிப்பை துரிதப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து விரிவாக ஆலோசித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
