ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ராணுவ தாக்குதல்களை, அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்க பாதுகாப்பு துறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால், கச்சா எண்ணெய், டாலர் மதிப்பு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் உடனடி தாக்கம் இருக்கும் எனவும், இன்றைய பங்குச் சந்தையில் இதன் எதிரொலி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், நேற்று இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. வர்த்தகம் துவங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 14 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது. போர் ஆரம்பித்த பிப்.,28ம் தேதியில் இருந்து இன்று வரை, கிட்டத்தட்ட 50 லட்சம் கோடி ரூபாய் இழப்பு இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 3 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ், 1,836 புள்ளிகள் சரிந்து 72,696 என்ற நிலையிலும், நிப்டி 602 புள்ளிகள் சரிந்து 22,512 என்ற நிலையிலும் நிறைவடைந்தன.
போர் ஆரம்பித்த நாளில் இருந்து, வெறும் 24 வர்த்தக நாட்களில் இரண்டு குறியீடுகளும் கிட்டத்தட்ட 10.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.
நேற்றைய சரிவுக்கான முக்கிய காரணங்கள்
ஈரானின் மின்சார கட்டமைப்பை 48 மணி நேரத்துக்குள் தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை
அமெரிக்கா தாக்கினால், வளைகுடா நாடுகளின் எரிசக்தி மற்றும் நீர் விநியோக கட்டமைப்புகளை தகர்ப்போம் என ஈரான் விடுத்த பதில் எச்சரிக்கை
உலகளாவிய எரிசக்தி வினியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது; இது, இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து பணவீக்கத்தை உயர்த்தும் எனும் அச்சம்
ஜப்பானின் நிக்கி (3.5%), ஹாங்காங்கின் ஹாங்செங் (3.5%) மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி (6.5%) சந்தைகள் சரிந்தது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.03 என்ற நிலைக்கு சரிந்தது
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறுவது
உலகளாவிய கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு.
