தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இளைஞர்களும், மாணவர்களும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இங்கு நடக்கும் போராட்டங்களுக்கு திமுக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறை அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீட் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள், மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் கடந்த 20 ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்ததை தொடர்ந்து, டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்த வகையில் சென்னை எழும்பூரில் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையில் தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் DYFI, SFI அமைப்பினை சார்ந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஒன்றிய அரசு பாஜக அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட் வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இத்தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் டெல்லில் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசுடைய இந்த நெஞ்சை பதைப்பதைக்கும் இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாட்டிலும் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராடவழியில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காவல்துறையால அலைக்கழிக்கப்படுகின்றனர். அதோடு அவர்கள் கைது செய்யப்படும் நடவடிகையும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.
சென்னையில் பல நகரங்களில் கலவி வளாகத்திற்குள் புகுந்து காவல்துறை கைது செய்துள்ளது. இதுவரை நடந்திராத இச்செயல் மை மோசமான அத்துமீறல். கல்லூரி வளாகங்களுக்குள் காவலதுறை சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இது மாதிரியான ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும். நீட் தேர்வினை ரத்து செய்யுமாறு சொல்லும் தவெக அரசு , அத்தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுடைய ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவிற்கு துணை போவதாகவே அமைந்து விடும். எனவே தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
