வாஷிங்டன்: ‘ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே, யாரும் பார்த்திடாத ஒரு மாற்றத்தை நாம் அடைந்துள்ளோம் என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். உண்மையிலேயே இது ஒரு யுகத்திற்கான திருப்பம்,’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் 2வது ஆட்சி காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அந்நாட்டு பார்லியில் உரை நிகழ்த்தினார். தனது நிர்வாகத்தின் முக்கிய சாதனைகளையும், அடுத்த ஆண்டுக்கான முன்னுரிமை திட்டங்களையும் அவர் விவரித்து பேசினார்.
டிரம்ப் பேசியதாவது; அமெரிக்கப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க எல்லைகள் தற்போது மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அமெரிக்காவின் எதிரிகள் பீதியில் இருக்கின்றனர். அமெரிக்க ராணுவமும், போலீசாரும், முன்னெப்போதும் இல்லாததை விட மிகவும் வலிமை பெற்றுள்ளன. உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மீண்டும் மரியாதையை கிடைத்துள்ளது.
நான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று, வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, நாடு இக்கட்டான சூழலில் இருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே, யாரும் பார்த்திடாத ஒரு மாற்றத்தை நாம் அடைந்துள்ளோம் என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். உண்மையிலேயே இது ஒரு யுகத்திற்கான திருப்பம்.
ஓராண்டுக்கு முன்பு தான் பதவியேற்றபோது இருந்த பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அமெரிக்கா இன்னும் சிறப்பாகவும், மேன்மையாகவும் செயல்படப் போகிறது. இது அமெரிக்காவின் பொற்காலம், இவ்வாறு அவர் கூறினார்.
