மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் மகளிருக்கான திட்டங்களை அறிவித்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கை திட்டங்களை விஜய் வாசித்தார்
போதை பொருள் இல்லாத தமிழ்நாடு
போதை பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு போதை பொருட்கள் உள்வரவு தடுப்பு மற்றும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் கடுமையான சட்டங்களுடன், ட்ரக்ஸ் அபியூஸை கையாளுவதற்காக சமூக காவல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அதற்கான முழு அர்ப்பணிப்புடன் கூடிய பிரத்தியேக அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படும். போதை பொருட்கள் நடமாட்டத்தால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பொது விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதனை தடுக்கவும் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்படும்.
கல்வி உத்தரவாதம் திட்டம்
தமிழ்நாட்டில் எந்த ஒரு இளைஞரும் நீதி பற்றாக்குறையால் கல்வி பெற முடியாமல் போகவே கூடாது. எனவே இளைஞர்களின் கல்வியை உறுதி செய்ய 12 ஆம் வகுப்புக்கு பிறகு பிஎச்டி வரை கல்வி பயில ரூபாய் 20 லட்சம் வரை பிணையம் இல்லாத இலவச கடன் பெறுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும். அரசு வேலை என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கும் போது அதில் ஏற்படும் குறைகளை களைய ‘தமிழ்நாடு ரெக்ரூட்மெண்ட் அக்கவுண்டபிலிட்டி டிரான்ஸ்பரன்சி’ ஆக்ட் வாயிலாக அனைத்து மாநில அரசு பணியிடங்களுக்கும் முறையான ஆள்சேர்ப்பு கால அட்டவணை உருவாக்கப்படும். காலக்கெடுவிற்குள் மேல் எந்த ஒரு தாமதமும் ஏற்படாமல் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, டிஎன்இபி அறிவிப்பு முதல் நியமனம் வரையிலான முழு ஆள்சேர்ப்பு சுழற்சியையும், 365 நாட்களுக்குள் முடிக்க சட்டப்படி கட்டமைக்கப்படும்.
வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதி உதவி
29 வயதிற்கு மேலும் வேலைவாய்ப்பில் தாமதமாகும் சூழல் உருவானால் மாதம்தோறும் பட்டதாரிகளுக்கு நான்காயிரம் ரூபாயும் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 2500 ரூபாயும் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும். இது இளைஞர்களின் வேலைவாய்ப்பை தேட உதவும் ஓர் ஊன்றுகோல் ஆக அமையும்.
வெற்றி தொழிற்பயிற்சி உத்திரவாதம்
ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளை வழங்க நமது அரசு தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து செயல்படும். பட்டதாரிகளுக்கு மாதம் பத்தாயிரமும், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 8000 மாநில அரசே வழங்கும். இது வணிக நிறுவனங்களுக்கான பணியமர்த்தல் செலவை குறைத்து உள்ளூர் ஆட்களை பணியமர்த்த அவர்களை ஊக்குவிக்க அமையும். வெற்றி தொழில் முனைவோர் திட்டம் நமது இளைஞர்கள் வேலை வைத்திருப்பவர்களாக மட்டுமாக இருக்கக் கூடாது அவர்களை வேலை வழங்குபவர்களாக மாற்றுவது எங்கள் தொலைநோக்கு பார்வை. அதற்கான திட்டம் வெற்றி தொழில் முனைவோர் திட்டம். நேர்மையான தொழில் முனைவோரை உருவாக்க திட்டத்தின் கீழ் ரூபாய் 25 லட்சம் வரை இலவச கடன் வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்படும்.
நமது ஊரில் நமக்கே வேலை வாய்ப்பு திட்டம்
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதை உறுதி செய்வதே இந்த அரசின் நோக்கமாக இருக்கும். அதற்காகவே ‘தமிழ்நாடு எம்பிளாய்மெண்ட் கிரெடிட்ஸ் சிஸ்டம்’ உருவாக்கப்படும். அதன்படி பணியாளர்களில் 75% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி 2.5% மீது மானியமும், மின் கட்டணங்கள் மீது ஐந்து சதவீதம் மானியமும், அரசு கொள்முதலில் முன்னுரிமை வழங்கப்படும்.
முதல்வர் மக்கள் சேவை நண்பர்
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் முதல்வர் மக்கள் சேவை நண்பர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு அவர்களின் வசிப்பிடத்திலேயே 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி மக்களுக்கு 100% அரசு சேவைகளை வீட்டு வாசலிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும். நல்லாட்சிக்காக இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையான மாநிலத்தின் கூட்டு இணைப்பாக இது அமையும். இந்த திட்டத்தில் பங்காளராக பணியாற்றும் இளைஞருக்கு மாதம் தோறும் 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு இளைஞர் ஆலோசனை குழு
தமிழ்நாடு இளைஞர் ஆலோசனை குழு அமைக்கப்படும். பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நேரடியாக இளைஞர்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்து இளைஞர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் கவலைகள் பரிந்துரைகளை முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கான ஒரு தளமாக தமிழ்நாடு இளைஞர் ஆலோசனைக் குழு நிறுவப்படும். இந்த முயற்சி செயல்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழும்.
படைப்பாளி தொழில் முனைவோர் திட்டம்
தமிழ்நாட்டின் வரலாறு பாரம்பரியம், கலாச்சாரம், முன்னேற்றம் குறித்த அம்சங்களை உலக அரங்கில் பரப்பி தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய படைப்பாளி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு படைப்பாளி தொழில் முனைவோர் திட்டம். தமிழ்நாடு அரசுக்கும் நமது மாநில இளைஞர்களுக்கும் இடையேயான ஒரு மாற்றத்தை உருவாக்கும் டிஜிட்டல் கூட்டாண்மை திட்டமாகும். ஒரு லட்சத்து 50 ஆயிரம் படைப்பாளி தொழிலாளர்களுக்கு தொடக்க மூலதனம் தரும் இந்த திட்டத்திற்கு ஆதரவாக நமது இளைஞர்களுக்கு நவீன கால பயிற்சிகள் அளிக்க 500 படைப்பாளி பள்ளிகள் நிறுவப்படும். நம் மாநிலத்தின் மீது ஈர்ப்பு கொண்ட இளைஞர்களை ஊக்குவித்து தமிழகத்தின் பெருமை உலகறிய செய்ய இது ஒரு முயற்சி.
