இது போன்றதொரு தாக்குதலை ஈரான் சற்றும் எதிர்பார்க்கவில்லை: சொல்கிறார் அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: ”வரலாற்றில் இதுவரை தாக்கிய எந்த நாட்டையும் விட ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது ” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: கடந்த 11 நாட்களில், அமெரிக்க ராணுவம் ஈரானை ஏறக்குறைய அழித்துவிட்டது. அது ஒரு கடினமான நாடு. அவர்களின் விமானப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்கு மூன்று மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் ஆனது.

அவர்களிடம் இப்போது ரேடார் வசதி இல்லை. அவர்களிடம் விமான எதிர்ப்புத் தளவாடங்கள் இல்லை. அவர்களிடம் இப்போது எதுவுமே இல்லை. அவர்களின் ஏவுகணைத் திறன் 90% குறைந்துவிட்டது. அவர்களின் ட்ரோன்கள் 85% குறைந்துவிட்டன. அவை தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளை நாங்கள் எல்லா இடங்களிலும் குண்டுவீசித் தகர்த்து வருகிறோம்.

கண்ணி வெடிகள்

நீங்கள் இப்போது காண்பது போன்ற ஒன்றை இதற்கு முன் யாரும் கண்டதில்லை. அவர்களிடம் இப்போது அணுசக்தித் திறன் ஏதுமில்லை. ‘மிட்நைட் ஹேமர்’ நடவடிக்கைக்குப் பிறகு, நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம். அதுவே அவர்களைச் சிறிது காலத்திற்கு முடக்கிவிடும் என்று நாங்கள் கருதினோம். ஆனால் அவர்கள் மீண்டும் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

அதனால்தான் நாம் இப்போது அதை முழுமையாக முடித்துவைக்க வேண்டியுள்ளது. எனது நிர்வாகம் உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் சில இலக்குகளைத் தகர்த்தோம். அவர்கள் கடலில் கண்ணி வெடிகளைப் பதிக்க விரும்பினார்கள். படகுகளைத் தகர்ப்பதற்காகவே அந்தக் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்றார்கள்.

இரண்டு நாட்களில் அவர்கள் 54 கப்பல்களைச் செயலிழக்கச் செய்தார்கள். இன்று சர்வதேச எரிசக்தி முகமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது என்பதைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; உலகின் பல்வேறு நாடுகளின் பெட்ரோலியக் கிடங்குகளிலிருந்து, இதுவரை இல்லாத அளவாக 400 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விடுவிப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஆபத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவரும் வேளையில், இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை கணிசமாகக் குறைக்கும். ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த, ‘ஆபரேஷன் எபிக் ப்யூரி’ (Operation Epic Fury) எனும் பெயரில் நாங்கள் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொண்டோம்.

47 ஆண்டுகளுக்கு…!

அது ஒரு அற்புதமான பெயர், இல்லையா? சரி, நீங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே அந்தப் பெயர் அர்த்தமுள்ளதாக இருக்கும். மிகவும் கொடூரமான சில மனிதர்களை ஒழித்துக் கட்டுவதற்காக நாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நடவடிக்கை 47 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த 47 ஆண்டுகளாக அவர்கள் எங்கள் மக்களைக் கொன்று குவித்தனர். அவர்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இதனால் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலுக்கு அவர்கள் ஆளானார்கள். இது போன்றதொரு தாக்குதலை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Source link