‘இது யூகமல்ல, அவரே ஒப்புக்கொண்ட உண்மை’-தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமாரை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தீப் மிட்டல் தமிழ்நாடு அரசின் ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் தலைமைச் செயலாளர் மாற்றம் உள்ளிட்டவற்றை திரும்பப்பெற வேண்டும் என திமுக சார்பில் எம்பி டிஆர்.பாலு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை இயக்குநராக சந்திப் மிட்டல் நியமிக்கப்பட்டதை திமுக எதிர்கிறது. இது தன்னிச்சையான நியாயமற்ற நடவடிக்கை.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை பொறுப்பில் இருந்து சந்திப் மிட்டலை நீக்க வேண்டும். ஏப்ரல் எட்டாம் தேதி கொடுத்த அந்த உத்தரவைத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற வேண்டும். தலைமைச் செயலாளர் மாற்றத்தையும் திரும்பப்பெற வேண்டும். எந்தவித புகார்களும் இல்லாத நிலையில் தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப்பெற வேண்டும். தலைமைச் செயலாளர் முருகானந்தம் மீது எந்த ஒரு முக்கிய அரசியல் கட்சியும் புகார் அளிக்கவில்லை. முருகானந்தத்தை பணியிட மாற்றம் செய்ய எந்தவிதமான தர்க்கரீதியான நியாயமான காரணங்களும் இல்லை.

இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சந்திப் மிட்டல் பாஜக ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். இது யூகமல்ல அவரே ஒப்புக்கொண்ட உண்மை. அரசு அதிகாரிகளின் ஊழல் புகார்களை விசாரிக்கும் அமைப்பான டிஏவிசிக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. அப்படி தொடர்பில்லாத அரசு பதவிகளுக்கு அதிகாரியை நியமிக்க அல்லது மாற்ற தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link