வாஷிங்டன்: சுவிட்சர்லாந்தின் முன்னாள் அதிபர் பேசிய விதம் பிடிக்கவில்லை அதனால் வரியை 39 சதவீதமாக உயர்த்தினேன், என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், உலக நாடுகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளையும், வரிகளையும் விதிக்கத் தொடங்கினார். சில நேரம் அவரது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் அந்தக் கூற்றை டிரம்ப்பே நேரடியாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பாக்ஸ் பிசினஸ்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்திற்கு விதித்த வரியை திடீரென உயர்த்தியதற்கு கொடுத்த அதிர்ச்சி காரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
சுவிட்சர்லாந்து உடனான வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக, அந்நாட்டு பொருட்களுக்கு 30 சதவீத வரி விதிக்க முடிவு செய்தேன். இதனால் அப்போதைய அதிபர் காரின் கெல்லர் சட்டர் என்னுடன் தொலைபேசியில் பேசினார்.
அந்த அழைப்பின்போது, நாங்கள் சிறிய நாடு, இதைச் செய்ய முடியாது என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அது மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததது. அவர் என்னிடம் பேசிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, வரியைக் குறைப்பதற்குப் பதிலாக, 30 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்த்தினேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இந்தப் பேட்டி, டிரம்பின் வர்த்தகக் கொள்கையில் தனிப்பட்ட உணர்வுகளும் பங்கு வகிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
