அதிமுக தொடர்ச்சியாக பல விதமான சவால்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மற்றொரு பக்கம் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக அதிமுக தொடர்ச்சியாக புகார்கள் அளித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் குறித்து தளவாய் சுந்தரம் பேசியுள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
அதிமுகவில் இருந்து இதுவரை 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துள்ளனர். இதன் காரணமாக அதிமுகவின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கிடையில் ராஜினாமா செய்த ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அக்கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ராஜினாமா விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாகவும் ஆளுநரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் சட்டப்பேரவை தலைவரிடம் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 6 எம்எல்ஏக்களுக்கு எதிராக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபாநாயகர் இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரிடம் விளக்கம் கேட்டிருந்தார். இதனையடுத்து இபிஎஸ்ஸின் விளக்க கடிதத்தை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிள் பேரவை தலைவரை சந்தித்து வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட விளக்க கடிதம் கடிதம் குறித்து பேசினார்கள். அப்போது தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜினாமா செய்தவர்களுக்கு சீட் வாங்கும் போது அதிமுக தலைமை மீது அதிருப்தி இல்லையா? சீட் கொடுக்கும்போது அதிமுக உறுப்பினர்களாக இருந்தார்கள். ஆட்சி வரவில்லை. தோல்வி அடைந்தோம். தவெக ஆட்சி அமைத்தது. அங்கு சென்று மந்திரி பதவி வாங்கலாம் என்று தான் இதெல்லாம் செய்தார்கள்.
அது தோல்வியில் முடிந்து விட்டது என்றார். அப்போது அவரிடம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்த காரணத்தினாலே ராஜினாமா செய்ததாக அவர்கள் கூறுகிறார்களே என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு அது தவறான தகவல். என்ன ஆதாரம் உள்ளது. ராஜினாமா செய்தவர்கள் மட்டுமே இதை சொல்கிறார்கள். வேறு யார் இதை கூறுகிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்தார்.
மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இக்கட்சி எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கட்சி. எடப்பாடி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் வெளியே சென்றுள்ளார்கள். கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் மனக்கசப்பு எப்போது வேண்டுமானாலும் மாறலாம். ஜெயலலிதா காலத்திலே எதிர்த்து நின்றவர்கள் திரும்பி வந்தார்கள். இது ஒரு பங்காளி சண்டை தான். மனம் மாறி திரும்பி வரலாம் என்றார்.
மேலும், 1996 ஆம் ஆண்டில் இதை காட்டிலும் மோசமாக இருந்தது. நாங்கள் 15 எம்பிக்கள் இருந்தோம். ஏழு பேர் கட்சியை விட்டு போய்விட்டார்கள். அதற்காக ஜெயலலிதா கட்சியை விடவில்லை. திரும்பி நின்று வெற்றி பெற்றார்கள். அதே போன்று தற்போதைய சூழலில் இருந்தும் மீண்டு வரும் எனவும் தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
