இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பையில்

பாங்காக்: பெண்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியை வீழ்த்தியது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், வளர்ந்து வரும் பெண்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்ஸ்’ ஆசிய கோப்பை கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, மலேசியா, எமிரேட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’, பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த பாகிஸ்தான் ‘ஏ’ அணிக்கு ஷவால் சுல்பிகர் (23), குல் ருக் (21), அனோஷா நசிர் (17) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற பாகிஸ்தான் ‘ஏ’ அணி 18.5 ஓவரில் 93 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் கேப்டன் ராதா யாதவ், சாய்மா தாகூர், பிரேமா ரவாத் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

விருந்தா அரைசதம்: சுலப இலக்கை விரட்டிய இந்தியா ‘ஏ’ அணிக்கு ஹுமைரா காசி (0) ஏமாற்றினார். அனுஷ்கா சர்மா (24) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய தினேஷ் விருந்தா, 25 பந்தில் அரைசதம் எட்டினார். மோமினா ரியாசத் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய தேஜல் ஹசாப்னிஸ் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தியா ‘ஏ’ அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்து வெற்றி பெற்றது. விருந்தா (55 ரன், 12×4), தேஜல் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் விருந்தா வென்றார்.

இதுவரை விளையாடிய 2 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் இந்தியா ‘ஏ’ அணி 2வது இடத்தில் உள்ளது.

Source link