இந்தியாவிடம் வீழ்ந்தது ஹாங்காங் * ஆசிய கோப்பை கால்பந்தில்

கொச்சி: ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. நேற்று நடந்த கடைசி போட்டியில் 2-1 என ஹாங்காங்கை வீழ்த்தியது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 19 வது சீசன் வரும் 2027, ஜன. 7-பிப். 5ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 141 வது இடத்திலுள்ள இந்திய அணி ‘சி’ பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றது.

முதல் 5 போட்டியில் இந்திய அணி 2 ‘டிரா’, 3 தோல்வியுடன், பட்டியலில் கடைசி இடம் (2 புள்ளி) பெற்று, ஆசிய கோப்பை தகுதி வாய்ப்பை இழந்தது. நேற்று தனது கடைசி போட்டியில் இந்திய அணி, மீண்டும் ஹாங்காங்கை (153 வது இடம்) எதிர்கொண்டது. இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு பெற்றார் ரியான் வில்லியம்ஸ்.

போட்டி துவங்கிய 4வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்விர் சிங் கொடுத்த பந்தை பெற்றார் புதிய வரவு ரியான் வில்லியம்ஸ். அதே வேகத்தில் பந்தை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார். இந்திய அணிக்காக ரியான் அடித்த முதல் கோல் இது.

போட்டியின் 49வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ் மிஷ்ரா தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

65 வது நிமிடத்தில் ஹாங்காங் வீரர் பிரவுன்ஸ்டைன் தந்த பந்தை பெற்ற காமர்கோ, கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது.

Source link