சமீபத்தில், குஜராத்தை சேர்ந்த எரிவாயு நிறுவனமான பெட்ரோனட், ‘போர்ஸ் மஜூர்’ என்ற நிலையை அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. அதன் விளைவு, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் நிறுவனங்கள் பல, தங்கள் ஆலைகளை மூடின. சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவகங்கள் வழக்கம்போல் செயல்படுவது கேள்விக்குறியாகிவிட்டது. வீடுகளில் கூட எல்.பி.ஜி., சிலிண்டர்களை வாங்கி வைப்பதற்காக பொதுமக்கள் அலைமோதுகின்றனர்.
அப்படி என்னதான் அந்த ‘போர்ஸ் மஜூர்’? ஒரே அறிவிப்பில் தொழில்துறையில் இருந்து சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கைவரை புரட்டிப்போட்டுள்ள அந்த வார்த்தைக்கு அர்த்தம்தான் என்ன?
இதை தெரிந்துகொள்வதற்கு முன், முதலில் ஒரு கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாடு இயங்குவதற்கு தேவையான அளவுக்கு நம்மிடம் எரிவாயுவோ, எரிபொருளோ இல்லை என்பதுதான் அது.
ஆனால், இருக்கிறது. ராஜஸ்தானிலும் ஆந்திராவின் கிருஷ்ணா – கோதவரி படுகையிலும் ஆண்டுக்கு 3,700 – 3,800 கோடி கன அடி இயற்கை எரிவாயு உற்பத்தியாகிறது. கேட்பதற்கு வேண்டுமென்றால் இது பிரமாண்டமாக இருக்கலாம். உண்மையில், இது யானை பசிக்கு வெறும் சோளப்பொரிதான். அந்த பசியை தணிப்பது, வளைகுடா நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதி மட்டுமே.
வளைகுடா நாடுகளில் எடுக்கப்படும் இயற்கை எரிவாயு, மைனஸ் 162 டிகிரி செல்ஷியசுக்கு குளிரூட்டப்பட்ட திரவமாக்கப்படுகிறது. திரவமாக்கப்பட்டதால் எல்.என்.ஜி., என்று அழைக்கப்படும் அது, இதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்பு கப்பல் வாயிலாக இந்தியாவுக்கு எடுத்து வரப்படுகிறது.
குஜராத்தின் தஹேஜ் முனையத்துக்கு எல்.என்.ஜி., கொண்டு வரப்படுகிறது. அதை, பெட்ரோனட் நிறுவனம் திரவ நிலையில் இருந்து மீண்டும் எரிவாயுவாக்கி, நம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகிக்க அனுப்புகிறது. இப்படி எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால், திடீரென இப்போது பிரச்னை எழுந்துள்ளதற்கு காரணம், ஹார்முஸ் ஜலசந்தி.
ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள, வெறும் 33 கி.மீ., அகலமான இந்த பாதை வழியாக தான் இந்தியாவுக்கு எல்.என்.ஜி. வந்தாக வேண்டும். வேறு வழி கிடையாது.
நிலத்தடி குழாய், தரைவழி வினியோகம் என்ற எந்த வசதியும் இந்தியா ஏற்படுத்தி வைத்திருக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி எப்போதும் திறந்தே இருக்கும், அங்கு போக்குவரத்துக்கு சிறிய சிக்கல் கூட வராது என்று கண்மூடித்தனமாக நம்பியதுதான் இதற்கு காரணம். அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து பிப்., 28ல் நடத்திய தாக்குதலில் தகர்ந்தது, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் அதிகாரப்பூர்வ இல்லம் மட்டுமல்ல, இந்தியாவின் இந்த நம்பிக்கையும்தான்.
அந்த போர் துவங்கியதற்கு பின், ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட ஸ்தம்பித்தே போய்விட்டது. இந்தியாவுடன் நீண்ட கால சப்ளை ஒப்பந்தங்களை செய்துள்ள கத்தார், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து எல்.என்.ஜி., வரத்து முடங்கியது.
அதை தொடர்ந்துதான் பெட்ரோனட் நிறுவனம், போர்ஸ் மஜூரை பிரகடனப்படுத்தியது. அதற்கு அர்த்தம், வளைகுடாவில் இருந்து எல்.என்.ஜி., வராத காரணத்தால், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளுக்கு எரிவாயு அளிப்பதாக தாங்கள் செய்திருந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாது என்பதுதான்.
பொதுவாக ஒப்பந்தம் என்பது, சட்டப்படி நிறைவேற்றியே ஆக வேண்டிய அம்சங்களை கொண்டிருக்கும்.
ஆனால், அவற்றிலேயே, அசாதாரண சூழல்களில், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டால், அவற்றை நிறைவேற்ற வேண்டிய சட்டப்பூர்வ கடமையில் இருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதற்கான அம்சமும் இடம்பெற்றிருக்கும். அதில், அந்த இக்கட்டான சூழலுக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ‘போர்ஸ் மஜூர்’.
இந்த நிலையை அறிவித்தன் வாயிலாக, ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது போல, தங்களால் எரிவாயு சப்ளை செய்ய முடியாது என்று பெட்ரோனட் சொல்லாமல் சொல்லிவிட்டது.
இந்தியாவுக்கே எரிவாயு அளிக்கும் பெட்ரோனட் இவ்வாறு கைவிரித்து விட்ட நிலையில், நாடு முழுதும் எரிவாயுவை வினியோகிக்கும், அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அரசின் கொள்கை படி, வீட்டு சமையல் எரிவாயுவுக்கு முன்னுரிமை, தொழிலக நிறுவனங்களுக்கு கடைசி உரிமை. அப்படியும், எல்.பி.ஜி., சிலிண்டர் பதிவுக்கான காத்திருப்பு காலம், 21ல் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை பற்றி கேட்கவே வேண்டாம். உணவகங்கள் சிலிண்டர் கிடைக்காமல் ஒவ்வொன்றாக மூடி வருகின்றன.
இந்த நிலைக்கு, எல்.என்.ஜி., எரிவாயு வினியோகம் குறித்த இந்தியாவின் நீண்ட கால கொள்கைதான் காரணம் என்று கூற முடியும். வளைகுடா நாடுகளுடன் 25 ஆண்டுகளுக்கும் மேல் கொள்முதல் ஒப்பந்தம் போட முடிந்த அரசால், ஹார்முஸ் ஜலசந்தியை மட்டுமே சார்ந்திருப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்ய இயலாத நிலை.
அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு வாங்குவதற்கான ஒப்பந்தங்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து கொள்முதல் அதிகரிப்பு என்று சில பல முயற்சிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், வளைகுடா போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை முன்னேறவில்லை.
