இந்தியாவின் பிரதமரும் ட்ரம்ப் தானோ? – எல்லை மீறும் அமெரிக்கா… மௌனம் காக்கும் மோடி!

‘உலகச் சந்தைகளில் எண்ணெய் இருப்பு தொடர்ந்து இருக்க வேண்டும்’ என்பதற்காக இந்திய ரீஃபைனர்கள் தற்காலிகமாக 30 நாள்களுக்கு ரஷ்யா எண்ணெயை வாங்க அமெரிக்க கருவூலத் துறை அனுமதிக்கிறது’. இது அமெரிக்கக் கருவூல செயலர் ஸ்காட் பெசன்டின் பதிவு. இந்தப் பதிவில், ‘அனுமதி’ என்கிற ஒற்றைச் சொல்லைக் கடந்து செல்ல முடியவில்லை… அப்படி சென்றுவிடவும் கூடாது. அமெரிக்கா இந்தியாவிற்கு யார்? நல்ல நண்பன்… வர்த்தகக் கூட்டாளி… அவ்வளவு தான். ஸ்காட் பெசன்ட் பதிவுஆனால், ஸ்காட் பெசன்ட்டின் பதிவு என்னவோ, அமெரிக்காவின் காலனித்துவத்தின் கீழ் இந்தியா இருப்பதுபோல, அதிகாரத் தோரணையுடன் இருக்கிறது. இந்தப் பதிவு வெளியாகி கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இந்தியாவின் ரியக்‌ஷனோ வழக்கம்போல, ‘மௌனம்’ தான். இனியும் இந்தியா வாயைத் திறக்கும் என்கிற நம்பிக்கை இல்லை. இங்கே ‘வழக்கம் போல’ என்கிற வார்த்தையை உற்றுக் கவனிக்க வேண்டும். காரணம், இந்தியாவின் மௌனம் இது முதன்முறை அல்ல. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல முறை இந்தியாவின் பதில் மௌனமாக மட்டுமே இருந்திருக்கிறது. ட்ரம்ப் பதவியேற்றதும் கொண்டு வந்த அதிரடிகளில் முதன்மையானது, ‘அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவது’ ஆகும்ட்ரம்பின் செயல் தவறானது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர் அதை எப்படிச் செய்தார் என்பது தான் தவறானது. சட்டத்திற்கு புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கைவிலங்கிட்டும்… கால் விலங்கிட்டும்… ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். ராணுவ விமானம் என்பது போர்க் கைதிகளுக்கு பயன்படுத்தும் ஒன்றாகும். பிழைப்புத் தேடி, பஞ்சம் பிழைக்கச் சென்ற மக்கள் சட்டத்தை ஏமாற்றி… சட்டத்திற்கு புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், அவர்களை போர் கைதிகளுக்கு இணையாக ‘அடிப்படை’ கண்ணியம் கூட இல்லாமல் வெளியேற்றியது அமெரிக்கா.இந்தக் கண்ணியக் குறைப்பாட்டிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன மெக்சிகோ, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகள். டொனால்டு ட்ரம்ப்கொலம்பியா, வெனிசுலா, மெக்சிகோ…கொலம்பியா மற்றும் வெனிசுலா தங்களது நாட்டிற்குள் அமெரிக்காவின் ராணுவ விமானம் தரையிறங்கவே அனுமதிக்கவில்லை. அவர்கள் தங்களது விமானத்தை அனுப்பி அவரவர் நாட்டு மக்களைக் கண்ணியமாக அழைத்து வந்தனர். மெக்சிகோ அமெரிக்க ராணுவ விமானத்தை நாட்டிற்குள் அனுமதிக்காமல், அமெரிக்காவின் வணிக விமானங்களில் மக்களை அழைத்து வந்த போது ஒத்துக்கொண்டது. இந்த நாடுகள் அவர்களது மக்களையும், அவர்களது மரியாதையையும் எப்படி பாதுகாத்திருக்கின்றனர்? ஆனால், இந்தியா செய்தது என்ன?விளக்கமளித்த இந்தியா2025-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி ராஜ்ய சபாவில் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். என்ன அது?’ஒரு நாட்டில் சட்டத்திற்குப் புறம்பாக நம் மக்கள் குடியேறியிருக்கிறார்கள் என்று தெரிந்தால், அவர்களை ஏற்றுக்கொள்வது நம்முடைய கடமை.அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறையின் கொள்கைப் படி, தங்களது நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய மக்களை அப்படித் தான் வெளியேற்றுவார்கள்’ என்று எங்கோ இருக்கும் அமெரிக்காவிற்கு சாதகமாக விளக்கமளித்தார் ஜெய்சங்கர்.இந்த விளக்கமும் ‘டக்’கென வந்துவிடவில்லை. ‘மத்திய அரசு அமெரிக்காவின் செயலுக்கு வாயை திறக்கவில்லை’ என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளும், கண்டனங்களும் எழுந்த பின் தான், இந்தப் பதில் வந்தது.வெளியேற்றம்அமெரிக்கா குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை கொள்கை என்றாலும், அதற்கு கொலம்பியா, மெக்சிகோ, வெனிசுலா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்… அவர்களது எதிர்ப்பை கேட்டு அமெரிக்கா அடிப்பணிந்தது எப்படி? இதை ஏன் இந்தியா செய்யவில்லை?தொடர்ந்து பல ஆண்டுகளாக, சட்டத்திற்குப் புறம்பாக வெளியேறிய இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றி கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது எதுவும் சத்தமில்லாமல், கண்ணியமான முறையில் நடந்தது.ஆனால், திடீரென்று ட்ரம்ப் தனது வெளிச்சத்திற்காக செய்த ஒன்றை கண்டும் காணாமல் இந்தியா கடந்தது.அடுத்தது, இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்.2025-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி இந்தியா பாகிஸ்தானில் ‘ஆபரேஷன் சிந்தூரை’ நடத்தியது. அதன் பிறகு, அது விஸ்வரூபம் எடுத்து… பின் சமாதானம் என மே 10-ம் தேதியே அதற்கொரு என்ட் கார்டு வந்துவிட்டது. ‘இந்தச் சமாதானம் பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுகொண்டதால்’ என்று இந்தியா கூறியது… இன்று வரை கூறுகிறது. ஆனால், ட்ரம்போ, ‘நான் வரியைக் காட்டி பயமுறுத்தினேன்… ஒப்பந்தத்தைக் காட்டி பயமுறுத்தினேன்’ என்று இந்த நொடி வரை திரும்பத் திரும்ப கூறி வருகிறார். அதற்கு தான் இந்திய பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்து விட்டாரே என்பது உங்களது மைன்ட் வாய்ஸா? இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் முடிந்த அன்றே, இந்தியா தெரிவிக்கும் முன்பே, ‘நான் தான் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்’ என்று பறைசாற்றி விட்டார். Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்ஆனால், இதை இந்தியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மூன்று நாள்கள் கழித்து மே 13-ம் தேதி மறுத்தார். இதன் பின், கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, ஜூன் 17-ம் தேதி, ட்ரம்ப் உடனான போன்காலில் மோடி இந்த விஷயத்தை வலியுறுத்தினார். இந்தியாவின் அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று, ‘இறையாண்மை’. அதற்கே ஒரு பாதிப்பு வரும் போது, இந்தியா உடனே எதிர்வினையாற்றாமல் மூன்று நாள்கள் கழித்து காலம்… நேரம் பார்த்து மறுப்பு தெரிவித்தது!இந்தியாவிற்கு அமெரிக்கா எப்படி நண்பரோ, வர்த்தகக் கூட்டாளியோ… அப்படித்தான் ரஷ்யாவும். சொல்லப்போனால், இந்தியா – அமெரிக்காவின் நட்பு வயதை விட, இந்தியா – ரஷ்யாவின் நட்பிற்கு வயது அதிகம்.அப்படியான நண்பரிடம் தான் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா கூறியது. இந்தியா உடன் வர்த்தகம் செய்யும் பணத்தை ரஷ்யா உக்ரைன் போருக்குப் பயன்படுத்துகிறது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா கட்டளையிடுவதெல்லாம் ‘டூ…டூ…டூ… மச்’.ஆனால், அதையும் இந்தியா கேட்டது என்பதுதான் ஹைலைட். கடந்த மாதம் இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்காக டிசம்பர் மாதத்தில் இருந்தே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைத்தது இந்தியா. மோடி – புதின் ‘வர்த்தக ஒப்பந்தம்’ என்பது இரு நாடுகளுக்கு இடையிலானது. ஆனால், இந்தியா, அமெரிக்கா ஒப்பந்தம் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து ‘இதோ பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது… அதோ பேச்சுவார்த்தை முடியப்போகிறது’ என ட்ரம்ப் அவ்வப்போது கமென்ட்ரி கொடுத்து வந்தார். இது அடிப்படையில் தவறு. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றாகத்தான் தெரிவிக்க வேண்டும். ஒருவர் மட்டும் முந்திக்கொண்டு சொல்வது முற்றிலும் தவறு. இந்த அடிப்படை நாகரிகமற்ற செயலுக்குக்கூட இந்தியா எதும் சொல்லவில்லை. போனது போகட்டும்… இப்போது இந்த மாதத்திற்கு வருவோம்.ஈரான் போர் – உலக நாடுகளை ஏதோ ஒருவிதத்தில் பாதித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொலை செய்யப்பட்டார். அவரது இறப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது கூட பரவாயில்லை. ஆனால், அவரது இறப்பிற்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது. மேலும், கடந்த மாதம் இந்தியா விசாகப்பட்டினத்தில் நடந்த கடற்பயிற்சிக்கு வந்த ஈரானின் போர்க்கப்பல் IRIS தேனா மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலைக் மீட்க இந்தியா உதவியதாக இப்போது இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா எதற்கும் உடனுக்குடன் உடன் பதில் அளிக்காது போலும். என்ன நடக்கும்… ஏது நடக்கும் என்று யோசித்து தான் அறிக்கை வெளியிடுகிறது. அதுவும் மூன்று நாள்கள் கழித்து. IRIS Denaஉலக அளவில் இந்தியா வளரும் நாடாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த நேரத்தில் இத்தனை மௌனங்கள் இந்தியாவை பலவீனமாகக் காட்டாதா… இந்திய பிரதமர் மோடி எங்கே… வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எங்கே… அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? இதே நிலை தொடருமா? அமெரிக்காவின் கைப்பாவையாக இந்தியா மாறுகிறதா? அனைத்திற்கும் பதில் எங்கே?

Source link