புதுடில்லி: புவனேஸ்வரில், வரும் 2028ல் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளது.
சர்வதேச தடகள கூட்டமைப்பு சார்பில், உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 21வது சீசன் போலந்தில் இன்று துவங்குகிறது. இந்நிலையில் நேற்று போலந்தில், உலக தடகள கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், வரும் 2028ல் உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் 22வது சீசனை நடத்திட இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து இப்போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், ஓட்டம் உள்ளிட்ட 13 வகையான போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
உலக உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கவுள்ளது. வரும் மார்ச் 24-25ல் கலிங்கா மைதானத்தில், தேசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கவுள்ளது.
இதுகுறித்து உலக தடகள துணை தலைவர் அடில் சுமாரிவாலா கூறுகையில், ”வரும் 2028 ல் உலக உள்ளரங்கு தடகள போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒலிம்பிக், உலக தடகளத்தில் நீரஜ் சோப்ரா பதக்கம் வென்ற பின், இந்தியாவில் தடகள போட்டிக்கான மவுசு அதிகரித்துள்ளது,” என்றார்.
