டாக்கா; வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்றுள்ள நிலையில், 2 மாதங்களாக முடங்கி இருந்த விசா சேவைகளை இந்தியாவில் மீண்டும் வங்கதேசம் துவக்கியுள்ளது.
வங்கதேசத்தில், 2024ல் நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சியை இழந்தது. இதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். மேலும், அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான ஹிந்து மக்கள் மீது தொடர் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுடன், பல ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
இதனால், இருநாட்டு துாதரக உறவு மற்றும் விசா சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த டிசம்பர் பிற்பகுதி முதல் தன் சேவைகளை வங்கதேச துாதரகம் தற்காலிகமாக நிறுத்தியது.
இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி., கட்சி தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் அந்நாட்டின் புதிய பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, 2 மாதமாக நிறுத்தப்பட்டிருந்த, விசா மற்றும் துாதரக சேவைகளை டில்லியில் உள்ள வங்கதேச துாதரகம் மீண்டும் துவங்கியுள்ளது. இதன் வாயிலாக, சுற்றுலா, மருத்துவம், வணிகம் மற்றும் வேலை வாய்ப்புக்கான விசா உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்திய அதிகாரிகளும் இதற்கு இணையான நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதையடுத்து, வங்கதேசத்தினருக்கான அனைத்து விசா சேவைகளையும் வரும் நாட்களில் இந்தியா முழுமையாக மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
