பாங்காக்: ஆசிய வில்வித்தையில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கல பதக்கம் கிடைத்தன.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசிய வில்வித்தை ‘ஸ்டேஜ் 1’ தொடர் நடக்கிறது. ரீகர்வ் பிரிவில் ஆண்கள் அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் சுஹ்ஜெய்ன், தேவாங்க், ஜுயல் இடம் பெற்ற இந்திய அணி, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து இருந்தது.
நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது. ‘ஷூட் ஆப்’ வரை சென்ற இப்போட்டியில் இந்தியா 29-27 என வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, மலேசியாவை 5-1 என்ற கணக்கில் சாய்த்து, பைனலுக்கு முன்னேறியது. இதில் நாளை கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.
பெண்கள் அபாரம்
பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் இந்தியாவின் சிகிதா, தேஜல், ராஜ் கவுர் இடம் பெற்ற அணி, தகுதிச்சுற்றில் ‘நம்பர்-1’ இடம் பெற்றது. நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, 232-222 என ஹாங்காங்கை வென்றது. அரையிறுதியில் இந்திய அணி, 229-226 என தாய்லாந்தை வீழ்த்தியது. பைனலில் (நாளை) இந்தியா-கஜகஸ்தான் மோத உள்ளன.
இரண்டு வெண்கலம்
ரீகர்வ் பெண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் ரிதி, கீர்த்தி, ருமா இடம் பெற்ற அணி, 1-5 என சீனாவிடம் தோற்றது. அடுத்து நடந்த போட்டியில் இந்திய அணி 5-1 என மலேசியாவை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றியது. ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரஜத் சவுகான், ரிஷாப், பிரதமேஷ் இடம் பெற்ற அணி, தகுதிச்சுற்றில் ‘நம்பர்-1’ இடம் பிடித்தது. எனினும் அரையிறுதியில் இந்திய அணி, 233-234 என வியட்நாமிடம் வீழ்ந்தது.
அடுத்து நடந்த போட்டியில் 234-232 என பூடானை சாய்த்து, வெண்கலம் வசப்படுத்தியது.
பெண்களுக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரிதி, 6-0 என மலேசியாவின் ஜோயே டனை வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.
