இந்தியாவுக்கு யூரியா அனுப்ப சீனாவிடம் அரசு கோரிக்கை

புதுடில்லி: சீன உர தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவுக்கு யூரியா உரம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சீனாவை இந்தியா கேட்டுக்கொண்டு உள்ளது.

இதுகுறித்து, தகவல்அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச்சூழல் நிலவுவதால் உர தயாரிப்புக்கு தேவையான எல்.என்.ஜி ., எனும் திரவ வடிவ இயற்கை எரிவாயு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்திய தொழிற்சாலைகள் பல மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, சீனாவில் உர ஏற்றுமதிக்கு தற்போது உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, சீன உர நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்குமாறு இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

அசாதாரண சூழல் நிலவும்போது, உள்நாட்டின் நலன்களை காக்க இவ்வாறு நடவடிக்கை எடுப்பது வழக்கம். போர் துவங்கிய முதல் வாரத்திலேயே யூரியாவின் விலை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக 21 சதவீதம் அதிகரித்தது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

சீனா, ‘கோட்டா’ முறையில் மட்டுமே யூரியா ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கிறது. அதன்படி, இந்தியா உட்பட சில நாடுகளுக்கு மட்டுமே குறிப்பிட்ட அளவு ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. நடப்பாண்டுக்கான அனுமதி குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

மத்திய கிழக்கிலிருந்து வரும் யூரியாவின் வரத்து தடைபடும் சூழலில், சீனா, ரஷ்யா, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வாங்கவும் இந்தியா, திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

அதிக இறக்குமதி

 உலகின் மிகப்பெரிய யூரியா இறக்குமதியாளர் நாடு இந்தியா தான்

 நடப்பு நிதியாண்டில் 98 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது

 அடுத்த 3 மாதங்களில் 17 லட்சம் டன் இறக்குமதி எதிர்பார்க்கப்படுகிறது.

Source link