ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் கேப்டன் சூர்யகுமார் ‘சூறாவளியாக’ விளாசினால், இந்தியா சுலப வெற்றி பெறலாம்.
இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடக்கும் ‘சூப்பர்-8’ போட்டியில் (பிரிவு-1) ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதுகின்றன.
இந்திய அணி, லீக் சுற்றில் நுாறு சதவீதம் வென்ற உற்சாகத்தில் ‘சூப்பர்-8’ல் களமிறங்குகிறது. துவக்கத்தில் இஷான் கிஷான் (4 போட்டி, 2 அரைசதம் உட்பட 176 ரன், ‘ஸ்டிரைக் ரேட்’ 202.29) விளாசுவது பலம். அபிஷேக் சர்மா 3 முறை ‘டக்’ அவுட்டானது பலவீனம். இன்று இவர் எழுச்சி பெற வேண்டும்.
மந்தமான ஆட்டம்: ‘மிடில் ஆர்டரில்’ கேப்டன் சூர்யகுமார், திலக் வர்மா அதிவிரைவாக ரன் சேர்க்க தவறுகின்றனர். நமீபியா (21 பந்தில் 25 ரன்), பாகிஸ்தான் (24 பந்தில் 25 ரன்), நெதர்லாந்துக்கு (27 பந்தில் 31 ரன்) எதிராக மந்தமாக ஆடிய, திலக் வர்மாவின் ‘ஸ்டிரைக் ரேட்’ 120 ஆக சரிந்தது. அமெரிக்காவுக்கு எதிராக 49 பந்தில் 84 ரன் விளாசிய சூர்யகுமார், அதற்கு பின் பெரிதாக சோபிக்கவில்லை. இவரது ‘டி-20’ சராசரி ‘ஸ்டிரைக் ரேட்’ 163. இது, இத்தொடரில் 136 ஆக குறைந்துவிட்டது. இன்று ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரராக சுழன்று விளையாட வேண்டும். கடைசி கட்டத்தில் ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா (‘ஸ்டிரைக் ரேட்’ 155), ஷிவம் துபே (‘ஸ்டிரைக் ரேட்’ 178) அதிரடியாக ரன் சேர்ப்பது பலம். ரிங்கு சிங் உட்பட 8 பேட்டர்கள் இருப்பதால், கவலைப்பட தேவையில்லை.
வருண் ‘மேஜிக்’: பவுலிங் அசுரபலத்தில் உள்ளது. ‘வேகத்தில்’ பும்ரா (3 போட்டி, 4 விக்கெட், எகானமி 6.00), ‘சுழலில்’ வருண் சக்ரவர்த்தி (4 போட்டி, 9 விக்கெட், எகானமி 5.16) மிரட்டுகின்றனர். இவர்களது 8 ஓவரை சமாளிப்பது தென் ஆப்ரிக்காவுக்கு கடினமாக இருக்கும். அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ், அக்சர் படேல் சேர்க்கப்படலாம்.
மார்க்ரம் வரம்: தென் ஆப்ரிக்க அணியும் லீக் சுற்றில் முழுமையாக நான்கு வெற்றிகளை பெற்று, ‘சூப்பர்-8’ல் காலடி எடுத்து வைத்துள்ளது. கேப்டன் மார்க்ரம் (4 போட்டி, 178 ரன், ‘ஸ்டிரைக் ரேட்’ 187.36), குயின்டன், பிரவிஸ், ஸ்டப்ஸ், ரிக்கிள்டன், ‘கில்லர்’ மில்லர், யான்சென் போன்றோர் நல்ல ‘பார்மில்’ உள்ளனர். ரபாடா, நிகிடி ( 3 போட்டி, 8 விக்., எகானமி 7.58), யான்சென், கேஷவ் மஹாராஜ் என பந்துவீச்சும் பலமாக உள்ளது. அபிஷேக் சர்மா ‘ஆப்-ஸ்பின்னரிடம்’ திணறுவதால், ‘பவர் பிளே’ ஓவரில் மார்க்ரம், பந்தை சுழற்ற வாய்ப்பு உண்டு.
இரு அணிகளும் மோதிய ‘டி-20’ உலக கோப்பை பைனல் (2024) கடைசி பந்து வரை பரபரப்பாக இருந்தது. இதில், இந்திய அணி 7 ரன்னில் வென்று கோப்பை கைப்பற்றியது. இதே போன்று இன்னொரு ‘விறுவிறு’ போட்டியை இன்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
உங்கள பார்த்தா கவலையா இருக்கு…
இந்திய கேப்டன் சூர்யகுமார் கூறுகையில்,”அபிஷேக் சர்மாவின் ‘பார்ம்’ பற்றி பலரும் கவலைப்படுகின்றனர். அவர்களை பார்த்து நான் கவலைப்படுகிறேன். கடந்த ஆண்டு அபிஷேக் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் எங்களுக்கு பக்கபலமாக இருந்தார். தற்போது அவருக்கு உறுதுணையாக இருப்பது எங்களது கடமை. தாக்குதல் பாணியில் விளையாடுவது அவரது வழக்கம். இதே போன்ற ஆட்டத்தை தொடர வேண்டும். தனது அடையாளத்தை அவர் இழந்துவிடக் கூடாது. எதிரணிகளின் ‘ஆப்-ஸ்பின்’ திட்டம் பற்றி கவலை இல்லை. எதையும் சந்திக்க தயாராக உள்ளோம். அணி நிர்வாகம் அறிவுறுத்தியபடி திலக் வர்மா விளையாடுகிறார். விரைவாக விக்கெட் சரிந்தால், சற்று நிதான ஆட்டத்தை கடைபிடிப்பார். இவருக்கு பதிலாக சாம்சனை சேர்க்கும் எண்ணம் இல்லை,”என்றார்.
யார் ஆதிக்கம்
‘டி-20’ உலக கோப்பை அரங்கில் இரு அணிகளும் 7 முறை மோதின. இந்தியா 5, தென் ஆப்ரிக்கா 2ல் வென்றன.
* சர்வதேச ‘டி-20’ அரங்கில் 35 முறை மோதின. இந்தியா 21, தென் ஆப்ரிக்கா 13ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* ஆமதாபாத் மோடி மைதான ஆடுகளத்தில் பேட்டர்கள் சாதிக்கலாம். இரவு நேர பனிப்பொழிவு ‘ஸ்பின்னர்’களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
* ஆமதாபாத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
