இந்தியாவை விட்டு வெளியேறலாம்: வாட்ஸ் அப், மெட்டாவுக்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை

புதுடில்லி: ” இந்தியாவின் அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால், நாட்டை விட்டு வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனங்கள் வெளியேறலாம்,” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கை தொடர்பாக , அந்த நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. இதனை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. மேலும், மெட்டா மற்றும் வாட்ஸ் அப் பயனர்களின் தரவை, விளம்பர நோக்கங்களுக்காக பகிர்ந்து கொள்ள என்சிஎல்ஏடி அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இந்திய போட்டி ஆணையம் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.மெட்டா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, வாட்ஸ்அப் சார்பில் அகில்சிபல் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணையின் போது, அபராத தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்துஇந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கூறியதாவது: தகுதி அடிப்படையில் இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்கிறோம். ஒரு தகவலை கூட பகிர்ந்து கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கி உள்ளது. பேஸ்புக்கை வேறு ஒருவர் வாங்குவார். அப்போது தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இந்த நாட்டின் தனியுரிமைக் கொள்கையுடன் நீங்கள் விளையாட முடியாது. வாட்ஸ் அப்பில் நாங்கள் ஒரு தெளிவான செய்தி செல்லட்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.

பயனர்களுக்கு விருப்பத் தேர்வு வழங்குவதாக வாட்ஸ் அப் கூறுகிறது. விருப்பத் தேர்வு என்பது என்ன? சந்தையில் நீங்கள் ஒருவர் தனித்து ஆதிக்கம் செலுத்துகிறீர்கள். பிறகு விருப்பத்தேர்வு வழங்குவதாக கூறுகிறீர்கள். வாட்ஸ் அப்பை விட்டுச் செல்லுங்கள் அல்லது உங்கள் தகவலகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம் என்பதே அர்த்தம்.சந்தையில் நீங்கள் ஒருவர் தனித்து ஆதிக்கம் செலுத்துவதால் பயனர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. ஏழை பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உங்களது கொள்கைகளை புரிந்து கொள்வார்களா?நீங்கள் லட்சக்கணக்கான மக்களின் தரவுகளை எடுத்துள்ளீர்கள். இது பயனர்களின் தரவுகளை திருடுவதற்கான ஒரு கண்ணியமான வழியாகும். இதைப்பயன்படுத்த உங்களை அனுமதிக்க மாட்டோம்.பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்த மாட்டோம் என வாட்ஸ் அப் மற்றும் மெட்டா நிறுவனம் உறுதி அளிக்காதவரை இந்த வழக்கை விசாரிக்க மாட்டோம் என்றார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’ வணிக நோக்கங்களுக்காக பயனர்களின் தரவுகளை பகிர்ந்து கொள்ளும் முறையை விமர்சித்தார்.

அப்போது தலைமை நீதிபதி கூறுகையில், உங்களால் இந்திய அரசியலமைப்பை பின்பற்ற முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். குடிமக்களின் தனியுரிமை சமரசம் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

Source link