புதுடில்லி: இந்தியா, அயர்லாந்து அணிகள் ‘டி-20’ தொடரில் பங்கேற்க உள்ளன.
இந்திய அணி, வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் (ஜூன் 6-10), மூன்று ஒருநாள் போட்டிகள் (ஜூன் 14, 17, 20) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி (ஜூலை 1-19), ஐந்து ‘டி-20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இத்தொடருக்கு முன், இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக ‘டி-20’ தொடரில் விளையாட உள்ளது. இதனை, அயர்லாந்தின் உயர் செயல்திறன் இயக்குனர் கிரஹாம் வெஸ்ட் உறுதி செய்தார்.
ஸ்டிர்லிங் விலகல்: சமீபத்தில் இந்தியா, இலங்கையில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணி லீக் சுற்றோடு வெளியேறியது. நான்கு போட்டியில், ஒன்றில் மட்டும் (எதிர்: ஓமன்) வெற்றி பெற்றது. இரண்டு போட்டியில் (எதிர்: இலங்கை, ஆஸி.,)தோல்வியடைந்தது. ஒரு போட்டி (எதிர்: ஜிம்பாப்வே) மழையால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து அயர்லாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து பால் ஸ்டிர்லிங் விலகினார். விரைவில் புதிய கேப்டன் நியமிக்கப்பட உள்ளார். இதுகுறித்து கிரஹாம் வெஸ்ட் கூறுகையில், ”வரும் 2028ல் நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டிர்லிங் விலகினார். புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் வீரருக்கு இந்திய தொடர் சவாலானதாக இருக்கும்,” என்றார்.
