பதும் தானி: ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடரில் இந்திய பெண்கள் அணி, ஆறுதல் வெற்றி பெற்றது
தாய்லாந்தில், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், 3 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, ‘சி’ பிரிவில் சீனதைபே, ஜப்பான், ஆஸ்திரேலிய அணிகளுடன் இடம் பெற்றது.
முதல் இரு போட்டியில் ஜப்பான், ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, நேற்று தனது கடைசி லீக் போட்டியில் சீனதைபே அணியை சந்தித்தது. இதில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால், காலிறுதி வாய்ப்பு குறித்து யோசிக்கலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.
போட்டியின் 26 வது நிமிடத்தில் இந்தியாவின் பூமிகா தேவி முதல் கோல் அடித்தார். 32வது நிமிடத்தில் சிபானி தேவி ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
22 ஆண்டுக்குப் பின்…
இரண்டாவது பாதியில் கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதில் இந்தியாவின் சிபானி கோல் அடித்து அசத்தினார். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+3வது) காவோ ஹிசின் கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆசிய கால்பந்து (20 வயது) அரங்கில், சீன தைபே அணிக்கு எதிராக 22 ஆண்டுக்குப் பின் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
மொத்தம் 3 போட்டியில் 3 புள்ளி எடுத்த இந்தியா, பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.
