இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு; பிரதமர் மோடி மகிழ்ச்சி

புதுடில்லி: இந்தியா- இஸ்ரேல் இடையே வலுவான உறவு உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாகஇன்று பிரதமர் மோடி டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இந்தியா, இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய இலக்காகும். 2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார்.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு பயணிப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இரு நாடுகளும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: எனது அன்பு நண்பர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், இரண்டு நாட்களுக்கு இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறேன். இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சுறுசுறுப்பைக் கண்டுள்ளது.

பிரதமர் நெதன்யாகுவுடன் எனது கலந்துரையாடல்களை எதிர்நோக்குகிறேன். இஸ்ரேல் பார்லிமென்டில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமராகும் பெருமை எனக்குக் கிடைக்கும். நீண்ட காலமாக இந்தியா-இஸ்ரேல் நட்பை வளர்த்து வரும் இந்திய புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகொள்வதை நான் எதிர்நோக்குகிறேன். எனது இஸ்ரேல் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source link