புதுடில்லி: ‘ஏ.ஐ., இம்பாக்ட் எக்ஸ்போ 2026’ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் இன்று துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
ஏ.ஐ., இம்பாக்ட் கண்காட்சியை பாரத் மண்டபத்தில், பிரதமர் இன்று மாலை 5:00 மணிக்கு துவக்கிவைக்கிறார். பிப்ரவரி 20 வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் கண்காட்சி, இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் உச்சி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான கொள்கைகளை செயலாக்கி காட்டும், தொழில்நுட்பங்களை சாதாரண மக்களுக்கும் சென்று சேர்க்கும் இந் தியாவின் திறனை இக்கண்காட்சி உலகுக்கு பறைசாற்றும்.
கிட்டத்தட்ட 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்த கண்காட்சியில், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, செர்பியா, எஸ்டோனியா, தஜிகிஸ்தான், ஆப்ரிக்கா ஆகிய 13 நாடுகளின் காட்சியகங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.
இதுதவிர 300க்கும் மேற்பட்ட கண்காட்சியகங்கள் இடம் பெறுகின்றன. 600க்கும் மேற்பட்ட பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றன.
இக்கண்காட்சிக்கு 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
