இந்தியா துவம்சம் செய்த தளத்தை தலிபான் படையும் தாக்கியது; பாகிஸ்தானுக்கு பேரிடி

இஸ்லாமாபாத்: ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, இந்தியா துவம்சம் செய்த விமானப் படை தளத்தை பாகிஸ்தான் சமீபத்தில் தான் சீர் செய்தது. தற்போது அந்த தளத்தில் ஆப்கானிஸ்தான் தாக்கியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் அதன் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தான் இடையே பயங்கரவாதிகள் விவகாரத்தால் மோதல் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தலிபான் அரசு உதவுவதாக பாக்., அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம், ஆப்கானிஸ்தானின் காபூல், கந்தஹார் உள்ளிட்ட இடங்களில் பாக்., வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 133 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, தலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் 53 இடங்களில் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இரு நாடுகள் இடையேயான எல்லை மோதல் கடுமையான போராக மாறியுள்ள நிலையில், பாகிஸ்தானின் மிக முக்கியமான ராணுவ தளம் உட்பட பல இடங்களை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தலிபான் படைகள் ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.

ராவல்பிண்டியில் உள்ள நுார் கான் விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டு மையம் ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஆப்பரேஷன் சிந்துார் மூலம் இந்தியப் படைகளால் தாக்கப்பட்ட இடமாகும். கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக புனரமைப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது தலிபான்களின் ட்ரோன் தாக்குதலால் மேலும் சேதம் அடைந்துள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12-வது டிவிஷன் தலைமையகம் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைபர் பக்துங்வா மாகாணத்தில், க்வாஸாய் ராணுவ முகாம் மற்றும் பல கட்டளை மையங்கள் ட்ரோன்கள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன.

ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகவும், பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானியை உயிருடன் சிறைபிடித்துள்ளதாகவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகள் மூடல்!

ஆப்கானிஸ்தான் நடத்திய தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானின் எல்லையோர மாகாணமான கைபர் பக்துங்வாவில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கைபர் பக்துங்வாவின் மொஹ்மந்த் மாவட்டத்தில் அரசு மாடல் உயர்நிலைப்பள்ளியை தலிபான் படைகளின் ட்ரோன் தாக்கியது. இதில் பள்ளிக்கட்டடம் சேதமடைந்தது.
உயிரிழப்பு ஏற்படவில்லை. என்றாலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மொஹ்மந்த் மாவட்டத்தில் 54 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று வடக்கு வாசிரிஸ்தான் மாவட்ட நிர்வாகம் 16 பெண்கள் பள்ளிகள் உட்பட எல்லைப் பகுதிகளில் உள்ள 33 கல்வி நிறுவனங்களை மூடியது. பஜவூர் மாவட்டத்தில் எல்லைப் பகுதிகளில் உள்ள 39 அரசுப் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link