2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் 16 பேர் கொல்லப்பட்ட பாஹலாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7 அன்று ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
தொடர்ந்து இரு நாடுகளும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று மாலை உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது.
உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டேன் என மிரட்டல் விடுத்தது இரு நாடுகளையும் சண்டையை நிறுத்த தானே சம்மதிக்க வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 60 தடவைக்கும் மேல் கூறிவிட்டார்.
ஆனால் மோதலை நிறுத்துவதில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த சூழலில் ஈரான் போர் நிறுத்தம் தொடர்பான அமைதிச் பேச்சுவார்த்தை நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலமையிலான குழுவும், ஈரான் பிரதிநிதிகள் குழுவும் நேற்று அங்கு 21 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து வந்தவர்கள் அனைவரும் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வியை தொடர்ந்து ஈரான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அறிவித்துள்ளார்.
அதே பதிவில் அவர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் சிறப்பான தலைமையின் கீழ் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் எனது பிரதிநிதிகள் எனக்கு முழுமையாக விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவுடனான பயங்கரமான போரில் இருந்து 30 முதல் 50 மில்லியன் உயிர்களை நான் காப்பாற்றியதற்காக அவர்கள் எனக்குத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கின்றனர். அந்த மனிதநேயம் அளப்பரியது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இந்தியா-பாகிஸ்தான் மோதலை தானே நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார்.
